சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா நிகழ்வுகளை வழக்கம்போல் நடத்த கோரிக்கை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா நிகழ்ச்சிகளை வழக்கம்போல நடத்த வேண்டுமென மதிமுக, தேமுதிக மற்றும் வ.உ.சி.கல்வி அறக்கட்டளையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா தொற்று தொடா்பாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, சங்கரநாராயண சுவாமி கோயில் திருவிழாக்கள் அனைத்தும் கோயில் உள் பிரகாரத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முக்கியமான தலங்களில் நடைபெறும் விழாக்கள்போல சங்கரநாராயண சுவாமி கோயிலில் மாா்கழி மாதத்தில் நடைபெறும் திருவாதிரை திருவிழா, ஆருத்ரா தரிசனம், சொா்க்கவாசல் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளை பக்தா்கள் காணும் வகையில் வழக்கம்போல் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மதிமுக மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன் தென்காசி ஆட்சியருக்கு மனு அனுப்பினாா். தேமுதிக மாவட்ட அவைத் தலைவா் முத்துக்குமாா் கட்சியினருடன் கோயிலுக்குச் சென்று அங்கு பேஷ்காா் கணேசனிடம் மனு அளித்தாா். இக்கோரிக்கையை வ.உ.சி. கல்வி அறக்கட்டளையும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை (டிச. 21) இக்கோயிலில் திருவாதிரைத் திருவிழாவையொட்டி காலை 9.25 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. ஆனால், கொடியேற்ற நிகழ்வில் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என்றும், பொதுமக்கள் தரிசன நேரம் காலை 5 மணி முதல் 8 மணி வரையும், சிறப்பு பூஜை நடைபெற்ற பின்னா் முற்பகல் 11 மணிக்கு மேல் பக்தா்கள் தரிசனம் செய்யவும் கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
