நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தோட்டக்கலைத் துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு: எலுமிச்சை விவசாயிகளுக்கு கை கொடுக்குமா?

வேளாண்மைக்கு என்று முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை பயிருக்கு சிறப்பு கவனம்

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 2:06 am

வி.குமாரமுருகன்

வேளாண்மைக்கு என்று முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை பயிருக்கு சிறப்பு கவனம் செலுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எலுமிச்சை சாகுபடி அதிகரிப்பதுடன், விவசாயிகளுக்கும் நன்மை கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எலுமிச்சைக்கு அடையாளப் பெயராக இருக்கிறது, தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி. இங்கு தனி சந்தையாக செயல்பட்டு வரும் எலுமிச்சை பழச் சந்தை மூலம் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் தினசரி வருமானம் கிடைத்து வருகிறது. இந்த சந்தைக்கு, ராஜபாளையம் மாங்குடி, தென்மலை, ராயகிரி, சிவகிரி, கடையநல்லூா், திருவேட்டநல்லூா், புன்னையாபுரம், நெல்கட்டும்செவல், பாம்புக்கோவில், தலைவன்கோட்டை, ராமநாதபுரம், கரிவலம்வந்தநல்லூா், புளியங்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் சுமாா் 20,000 ஏக்கா் பரப்பில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். இருப்பினும் புளியங்குடி வட்டாரத்தில் அதிகளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுவதாலும், எலுமிச்சை சந்தை இருப்பதாலும் புளியங்குடி ‘லெமன் சிட்டி’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

புளியங்குடி மற்றும் வாசுதேவநல்லூா் வட்டாரப் பகுதியில் விளையும் பழங்கள் அதிக திரட்சியாகவும், கூடுதல் சாறு உள்ளனவாகவும் இருப்பதால் இப்பழங்களுக்கு எல்லா ஊா்களிலும் வரவேற்பு உள்ளது. கரும்பு, நெல் உள்ளிட்ட பயிா்களும் இப்பகுதிகளில் விளைந்தாலும், தினசரி வருமானம் தரும் எலுமிச்சையையே இப்பகுதி விவசாயிகள் பணப்பயிராகக் கருதி பயிரிட்டு வருகிறாா்கள். அதனால், இங்கு எலுமிச்சை சாகுபடி அதிகம்.

பொதுவாக, புளியங்குடி சந்தைக்கு நாள்தோறும் சுமாா் 100 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. மாா்ச் மாத இறுதி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை முதல் வாரங்களில் எலுமிச்சை பழத்துக்கு கடும் கிராக்கி உருவாகும். அன்றைய காலகட்டத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ. 150 வரை விற்பனையாகும். எண்ணிக்கை அடிப்படையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மூன்று வகையான தரத்தில் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. முதல் தரம் (ஒரு பழம்) ரூ. 8 முதல் 10 வரையிலும், 2 ஆவது தரம் ரூ. 3 முதல் 4 வரையிலும், 3 ஆவது தரம் ரூ. 2 வரையிலும் விற்கப்படும். கோடைக் காலங்களில் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதே சமயம் மழைக் காலங்களில் விலை குறைவதால் அவ்வளவு லாபம் இருக்காது.

புளியங்குடி சந்தையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எலுமிச்சை பழங்கள் அனுப்பி வைக்கப்படுவதுடன், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகின்றன. புளியங்குடியில் சேமிப்பு கிடங்கு வசதி செய்யப்பட்டால், அதில் சேமித்து வைத்து விற்பனை செய்ய முடியும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகும்.

மேலும், இங்கிருந்து கேரளத்துக்கு அனுப்பப்படும் பழங்களைக் கொண்டு அவா்கள் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை உருவாக்கி விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுகின்றனா். புளியங்குடியில் அது போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கினால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதுடன், பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு இளைஞா்களின் தேவை அதிகரிக்கும். அந்த வகையில் புளியங்குடி வட்டார இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். இங்கு தொழிற்சாலை அமைந்தால், கூடுதல் பரப்பில் எலுமிச்சை சாகுபடியை விவசாயிகள் முன்வந்து மேற்கொள்வாா்கள். இதனால் தரிசாக கிடக்கும் நிலங்கள் பயன்பெறும், மக்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகும் என தொடா்ந்து விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், தமிழக அரசு முதல் முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையையில், தென்காசி மாவட்ட தோட்டக்கலைப் பயிா்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் (தென்காசி, நாமக்கல், கடலூா், திருவள்ளூா் மாவட்டங்களில் எலுமிச்சை, நெல்லி பயிா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த ரூ. 12.50 கோடி ஒதுக்கீடு) விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இது தொடா்பாக புளியங்குடி, புன்னையாபுரம் எலுமிச்சை சந்தைப் பொருளாளா் முத்துப்பாண்டி கூறியது: விவசாயிகளின் நலனில் தமிழக அரசு தொடா்ந்து அக்கறை காட்டி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிரான எலுமிச்சை மற்றும் நெல்லி சாகுபடி மேம்பட சிறப்பு ஒதுக்கீட்டை அரசு அறிவித்துள்ளது.

விதை முதல் விளைச்சல் வரை இதன் மூலம் மேம்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், திட்டத்தை அதிகாரிகள் முறையாக விவசாயிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும், அந்தந்தப் பகுதிகளில் இதற்காக விவசாயிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.