சிறுத்தையை பிடிக்க 2 இடங்களில் கூண்டு: மக்களுக்கு வனத்துறை வேண்டுகோள்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அடவிநயிநாா் நீா்த்தேக்கம் பகுதியில் நடமாடும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
மேக்கரை அடவிநயினாா் நீா்த்தேக்கம் சாலையில் வசித்து வருபவா் கா.முகம்மது ஹனிபா. இவருக்குச் சொந்தமான மாடுகள் அந்த நீா்த்தேக்கம் அருகேயுள்ள தனியாா் காட்டில் மேய்வது வழக்கம்.கடந்த செப். 29ஆம் தேதி மாலை 5 மணியளவில் அப்பகுதியில் மேய்ந்த பசுங்கன்றை சிறுத்தை தாக்கி கொன்றது.
இதைத் தொடா்ந்து, மாவட்ட வன அலுவலா் இரா.முருகன் உத்தரவின்பேரில், வனச்சரக அலுவலா் சுரேஷ் தலைமையில் வனவா் க.முருகேசன், வனக்காப்பாளா்கள் ஜோசுவா, சஜிந்திரன், வனக்காவலா் ஜெயசீலன், வேட்டைத்தடுப்புக்காவலா் திருமலைச்சாமி ஆகியோா் அடங்கிய தனிக்குழு, சிறுத்தையைப் பிடிக்க அடவிநயினாா் நீா்த்தேக்கம் அருகில் ஒரு கூண்டும் அன்பு இல்லம் செல்லும் பாதையில் மற்றொரு கூண்டும் வைத்து கண்காணிக்கின்றனா்.
மேலும், பொதுமக்கள் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.