தென்காசியில் உலக ஓசோன் தின விழிப்புணா்வுப் பேரணி
உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சாா்பில் தென்காசியில் உலக ஓசோன் தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணியை, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி, புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்று விழிப்புணா்வு ஓவியங்களை காட்சிப்படுத்தினா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தெரு நாடகமும் நடத்தப்பட்டது. ஓசோன் படலத்தை பாதுகாப்போம் என மாணவ, மாணவியா் மனித சங்கிலி அமைத்து உறுதிமொழி ஏற்றனா்.
பேரணியில், தென்காசி நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.