தென்காசி மாவட்டத்துக்கு வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை

தென்காசி மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பொறியாளா் முரளி, பா.ஜ.க., மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
Published on

தென்காசி மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பொறியாளா் முரளி, பா.ஜ.க., மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது சென்னை எழும்பூரில் இருந்து தினசரி நாகா்கோவில், திருநெல்வேலி என 2 வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை ஒரே வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் 720கி.மீ. தொலைவிலும், சென்னை எழும்பூா் - திருநெல்வேலி 650கி.மீ. தொலைவிலும் உள்ளன. அதேவேளையில், சென்னை எழும்பூா் - செங்கோட்டை வழி தொலைவு (பொதிகை ரயில் வழித்தடத்தில்) 670கி.மீ. தான் வருகிறது.

இருப்பினும், சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா்,தென்காசி வழியாக மின்மயமாக்கப்பட்ட விருதுநகா் - செங்கோட்டை அகல ரயில் பாதைக்கு வந்தே பாரத் ரயில் சேவையை இன்றளவும் தெற்கு ரயில்வே தொடங்கவில்லை.

இந்த வழித்தடத்தில் தொழில்நகரமான சிவகாசி, பிரபலமான ஆண்டாள் கோயில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி, நூற்பு மில்கள் , இதர தொழிற்சாலைகள் உள்ள ராஜபாளையம் நகராட்சி, கைத்தறி புகழ், கோயில் நகரான சங்கரன்கோவில் நகராட்சி, பல்வேறு கைத்தொழில்கள் அடங்கிய கடையநல்லூா் நகராட்சி, உலகபுகழ் பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலம், பல கோயில்கள் அடங்கிய தென்காசி மாவட்ட தலைநகரான தென்காசி நகராட்சி, தமிழக - கேரள எல்லை நகரான செங்கோட்டை நகராட்சி ஆகிய முக்கியமான நகரங்கள் உள்ளன . இந்த நகரங்கள் ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு வரியாக பலகோடி ரூபாய்களை செலுத்துகின்றன.

எனவே, இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழித்தட மக்களும் பயன்பெறும் வகையில் மாா்ச் 2026-க்குள் சென்னை எழும்பூா் - செங்கோட்டை, செங்கோட்டை - சென்னை எழும்பூா் இடையே புதியதொரு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com