எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புலிகள் காப்பகத்தில் வறட்சி: ஊருக்குள் வரும் சிறுத்தை, யானைகள்! அச்சத்தில் கிராம மக்கள்

வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, உணவு, குடிநீரைத் தேடி அங்கிருந்து வெளியேறி வனப் பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்குள்

News image
Updated On :10 ஜனவரி 2017, 3:13 am

ஷேக் அப்துல்காதர்

வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, உணவு, குடிநீரைத் தேடி அங்கிருந்து வெளியேறி வனப் பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்குள் சிறுத்தை, யானைகள் புகுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையத்தில் இருந்து திருக்குறுங்குடி வரை களக்காடு- முண்டன்துறை புலிகள் காப்பகம் 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்காப்பகத்தில் மலையடிவாரத்தில் 162 கிராமங்கள் உள்ளன.
வனங்கள், வன விலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மலையடிவாரங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கு சிறுதொழில் செய்ய வனத் துறை சார்பில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கிராம மக்கள் வனப்பகுதிக்கு சென்று விறகு வெட்டுவது குறைந்துள்ளது. மேலும், மலையடிவாரக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் மாற்றுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மலையடிவாரக் கிராமங்களில் புகுந்து சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி போன்றவை அட்டகாசம் செய்து வருவதால் விளைபொருள்கள் சேதமடைந்து வருவதாக கிராம மக்கள், விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
காரணம் என்ன? வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து நீர்வரத்து வெகுவாக குறைந்து வனப் பகுதியில் வறட்சியான சூழல் நிலவுகிறது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழைப் பொழிவு இல்லாததால் மலைப்பகுதியில் நீர்நிலைகள், சிறிய அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டுள்ளது. இதனால் விலங்குகள் தண்ணீருக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருவதாகக் கூறப்படுகிறது.
மணிமுத்தாறு அருவி, தலையணைப் பகுதி வழியாக யானைகள் வெளியேறி, பிரதான கால்வாயை அடுத்து கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல், தெற்கு பாப்பான்குளம் பகுதியில் நடமாடுகின்றன.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குமார் கூறியது: கோடைக் காலங்களில் கல்லிடைக்குறிச்சி அருகே மலையடிவாரத்தில் காட்டுயானைகள் நடமாட்டம் இருக்கும். தற்போது மழை இல்லாததால் பொட்டல் அருகேயுள்ள சீரான்குளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக 6 யானைகள் கூட்டமாக வருகின்றன. ஒரு யானை தனியாக நடமாடுவதையும் கிராம மக்கள் பார்த்துள்ளனர். அவ்வாறு வரும் யானைகள் தென்னை, பனைமரங்களை முறித்தும், விளைநிலங்களை அழித்தும் சேதப்படுத்தி வருகின்றன. யானைகள் நடமாட்டம் மிக அருகில் இருப்பதால் பொட்டல், மூலச்சி, உலுப்படிபாறை, மலையான்குளம், அழகப்பபுரம் போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது என்றார் அவர்.
இதேபோல், கடையம் அருகே மலையடிவாரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிலுள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைகள் புகுந்து  கால்நடைகளை கடித்துக் கொன்று வருகின்றன.


காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை
வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: தற்போது நிலவும் வறட்சியால் வனப் பகுதியில் விலங்குகளுக்கு போதிய நீர் ஆதாரம் கிடைக்காத சூழலில் அவை தண்ணீர் தேடி வெளியேறுகின்றன.
பொட்டல் அருகேயுள்ள சீரான்குளம் கல்குவாரியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைக் குடிப்பதற்காக வரும் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத் துறையினர் கடந்த 10 தினங்களாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும், யானைகள் விளைநிலத்தைச் சேதப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

சிறுத்தையைப் பிடிக்க நிரந்தரமாகக் கூண்டு!
புலிகள் காப்பகத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகள், மலையடிவாரங்களில் அட்டகாசம் செய்யும் சிறுத்தைகளைப் பிடிக்க கூண்டு பயன்படுத்தப்படுகிறது.பெத்தான்பிள்ளை குடியிருப்பில் ஏற்கெனவே 2 சிறுத்தைகளை வனத் துறையினர் பிடித்து காட்டுக்குள் கொண்டு விட்டனர். தற்போது சிறுத்தை அட்டகாசத்தை தடுக்க அங்கு நிரந்தரமாக ஒரு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. வனப் பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என வனத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.