திருநெல்வேலி மாவட்ட குளங்களில் கட்டணமின்றி விவசாயிகள் மண் அள்ளிக்கொள்ள துரிதமாக அனுமதி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
விவசாயிகள், மண்டபாண்ட தொழிலாளர்கள் குளங்களில் வண்டல் மண், சவுடு, களிமண், கிராவல் ஆகியவற்றை கட்டணமின்றி அள்ளிக்கொள்வது குறித்து தமிழக அரசு திருத்திய ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, பொதுமக்கள் 30 கனமீட்டர் (10 டிராக்டர் லோடு) அளவும், மண்பாண்ட தொழிலாளர்கள் 60 கனமீட்டர் (20 டிராக்டர் லோடு) அளவும், விவசாயிகள் நன்செய் நிலங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 75 கனமீட்டர் (25 டிராக்டர் லோடு) அளவும், புன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்காக 1 ஏக்கர் நிலத்திற்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர் லோடு) அளவும் கட்டணமின்றி வெட்டி எடுத்துக்கொள்ளலாம். இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இம்மாவட்டத்தில் 1,658 குளங்களில் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கூட்டம் நடத்தியும், விளம்பரம் மூலமாகவும் மண் அள்ளுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்களில் தகவல் மற்றும் சேவை மையம் அமைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
மேலும், மண் அள்ள அனுமதி கோரும் விவசாயிகளின் விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து, ஓரிரு தினங்களில் தீர்வு காண வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதி பெற்றுள்ள விவசாயிகள் டிராக்டர், லாரிகள், மாட்டு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் மண் எடுத்துச் செல்வதற்கான உதவிகளையும் வருவாய்த்துறையினர், வேளாண் துறையினர் ஒருங்கிணைந்து செய்துதர வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் ஆகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, கோட்டாட்சியர்கள் பி.ராஜேந்திரன் (தென்காசி), மைதிலி (திருநெல்வேலி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.