இனயம் துறைமுக திட்டம் நிறைவேறினால் தமிழகத்துக்கு பெருமை: பொன்.ராதாகிருஷ்ணன்

இனயம் துறைமுக திட்டம் நிறைவேற்றப்பட்டால், 4 பெரிய துறைமுகம் கொண்ட ஒரே மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெறும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இனயம் துறைமுக திட்டம் நிறைவேற்றப்பட்டால், 4 பெரிய துறைமுகம் கொண்ட ஒரே மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெறும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஏற்பாடு செய்த, அனைவருடனும் இணைந்த அனைவருக்குமான வளர்ச்சி என்ற விழா தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:
சாகர்மாலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம், இந்திய துறைமுகங்களில் உள்ள சரக்கு கையாளும் திறனான 1054 மெட்ரிக் டன் என்பதை 3 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. வ.உ.சி. துறைமுகம் 2015-16இல் கையாண்ட அளவு 36.84 மில்லியன் டன். சென்ற ஆண்டில் 38.46 டன்னாக அதிகப்படுத்தியுள்ளனர்.
உலக அளவில் கப்பல் துறை மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. நமது நாட்டில்தான்  கையாளும் திறன் ஏறுமுகத்தைச் சந்தித்து வருகிறது. சென்ற ஆண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளின் மதிப்பு ரூ.484 கோடியாகும். நிகழாண்டில் ரூ.786 கோடி மதிப்பில் புதிய கட்டுமானப் பணிகளை முடிக்க  துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள பெரியதுறைமுகங்கள் 12இல் தமிழ்நாட்டிலுள்ள எண்ணூர்,  சென்னை, வ.உ.சி. துறைமுகங்கள் அடங்கும். புதிதாக நான்கு துறைமுகங்களை பிரதமர் அறிவித்துள்ளார். அதில் இனயம் வர்த்தக துறைமுகமும் ஒன்று. இனயம் துறைமுகமும் சேர்ந்தால் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் 4 பெரிய துறைமுகங்கள் உள்ள ஒரே மாநிலமாக தமிழகம் திகழும்.
நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க மத்திய அரசு தீவிரக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும். 106 நீர்வழிப் பாதைகளை மத்திய  அரசு கண்டறிந்துள்ளது. அதில் தாமிரவருணியும் ஒன்று.
இந்தியாவின் மொத்த சாலைகளின் நீளம் 52 லட்சம் கிலோ மீட்டர். இதில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 90 ஆயிரம் கிலோமீட்டர். ஆனால், 40 சதவீத போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலைகளில்தான் நடைபெற்று வருகிறது.
எனவே, தேசிய நெடுஞ்சாலைகளை அதிகப்படுத்தும் முயற்சிகளை பாஜக அரசு மேற்கொண்டது. மோடி பிரதமராக  பொறுப்பேற்ற பிறகு நாள் ஒன்றுக்கு 30 கிலோ மீட்டர் சாலை அமைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தார்.
தற்போது நாள் ஒன்றுக்கு 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நிகழாண்டு இறுதிக்குள்ளாக 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில்  ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்த பயிர்ப் பாதுகாப்புத் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தால் விவசாயிகள் மரணம் நிகழ்ந்திருக்காது என்றார் அவர்.
விழாவில், சுப.நாகராஜன் வாழ்த்திப் பேசினார். பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் குமரேச சீனிவாசன், பொருளாளர் ராஜேஷ்ராஜா, நகரத் தலைவர் திருநாவுக்கரசு, நிர்வாகிகள் சங்கரசுப்பிரமணியன், கருப்பசாமி, ராஜ்குமார், மேலிடப் பார்வையாளர் அன்புராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ச.ஆனந்தசந்திரபோஸ் வரவேற்றார். துணைத் தலைவர் ச.நடராஜன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com