நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் 5 ஆண்டுகளுக்குப் பின் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பின. அணைகளிலிருந்து 10 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவ மழை காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்யும் சாரல் மழையால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து இருக்கும். 2013 ஆக. 8 இல் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 129
அடியாக இருந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பின் அணையின் முழுக்கொள்ளவு எட்டப்பட்டு அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி 65 நாள்களான நிலையில் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த ஆக. 9 முதல் தொடர்ந்து நீர்ப்பிடிப்பு மழைப் பகுதியில் மழை பெய்து வருவதையடுத்து அணைகள் முழுக் கொள்ளவை எட்டி அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகின்றது.
புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் ஒரே நாளில் 13 நீர் மட்டம் உயர்ந்து அணையின் நீர்மட்டம் 137 அடியாகவும் சேர்வலாறு அணையில் 6 அடி நீர்மட்டம் உயர்ந்து 146 அடியாகவும் இருந்தது.
பாபநாசம் அணைக்கு 5223.91 கன அடியும், மணிமுத்தாறு அணைக்கு 2927 கன அடியும், கடனாநதி அணைக்கு 2380 கன அடியும், ராமநதி அணைக்கு 694.06 கன அடியும் நீர்வரத்து இருந்தது. புதன் காலை பாபநாசம் மேலணையில் 187 மி.மீ., சேர்வலாறு அணையில் 59 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 64 மி.மீ., கல்லிடைக்குறிச்சியில் 56 மி.மீ., மணிமுத்தாறில் 9.6 மி.மீ., சேரன்மகாதேவியில் 53.2 மி.மீ., கடனாநதி அணையில் 65 மி.மீ., ராமநதி அணையில் 53 மி.மீ. மழை பதிவானது.
புதன்கிழமை மாலை பாபநாசம் அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடியும், சேர்வலாறு அணையிலிருந்து 4402 கன அடியும் கடனாநதியிலிருந்து 550 கன அடியும், ராமநதி அணையிலிருந்து 260 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
மேலும் அம்பாசமுத்திரத்தில் 11.60 மி.மீ., சேரன்மகாதேவி 2.20 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 53.40 மி.மீ., பாபநாசத்தில் 33 மி.மீ., மழைப் பதிவாகியிருந்தது.