அடுத்த தேர்தலிலும் மோடி தலைமையில் பாஜக ஆட்சியமைக்கும்: சுப்பிரமணியன் சுவாமி பேச்சு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. தெரிவித்தார்.
Updated on
1 min read

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. தெரிவித்தார்.
ஹிந்து ஆலய விழிப்புணர்வு இயக்கம், விராட் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில் ஹிந்து ஆலய விழிப்புணர்வு முதலாவது மாவட்ட மாநாடு, தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தென்காசி ஸ்ரீஜெகநாத் அரங்கில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு, துரை.தம்புராஜ் பாண்டியன் தலைமை வகித்தார். திருநெல்வேலி மேற்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மானனீய கோபாலகிருஷ்ணன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் வன்னியராஜன், ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் ஆறுமுகசாமி, பாஜக மாவட்டத் தலைவர் குமரேச சீனிவாசன், கே.எஸ்.பாடலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது: தென்காசியில் நான்கு ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால், மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுபோன்ற செயல்களைத் தடுக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்யும்.
தமிழகத்தில் 45 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அரசின் கையில் உள்ள அந்தக் கோயில்களை மீட்டு, யாரிடம் ஒப்படைப்பது என்பதில் குழப்பம் உள்ளது. எனவே சாதுக்கள், சன்னியாசிகள் மாநாடு நடத்தி ஒரு குழு அமைத்து முடிவிற்கு வந்தவுடன் கோயில்களை மீட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
ராமர் கோயில் இந்த ஆண்டு கட்டப்படும். இதுதொடர்பான வழக்கின் விசாரணை ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தீபாவளியை அயோத்தியில் கொண்டாடுவோம்.
அதேபோல் ராமர் சேது பாலம் அமைக்கும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு இலங்கைக்கு நடந்து செல்ல முடியும்.
2104 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜக ஆட்சியமைத்தது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் இதைவிட  அதிக வாக்குகள் பெற்று மூன்றில் இருபங்கு பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என்றார் அவர்.
தீர்மானங்கள்: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு உடனடியாக குடமுழுக்கு வேலையை தொடங்கவேண்டும். கோயிலின் ரத வீதிகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும். ரத வீதிகளில் முறையாக அனுமதி பெறாத மாற்று மத வழிபாட்டு இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும். கோயிலுக்கு சொந்தமான இடங்களிலுள்ள கடைகளின் முன்புறம் கோயில் நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட இடம் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். கலப்பட நெய் மற்றும் தரமற்ற எண்ணெய்களை விற்பனை செய்யும் குத்தகைதாரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். 
கோயில் நிலங்கள், கடைகளை ஹிந்துக்களுக்கு மட்டுமே பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும். கட்டண தரிசன முறையை  ஒழிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குற்றாலம் ஐந்தருவி சுவாமி அகிலானந்த மஹராஜ் ஆசியுரை வழங்கினார். பாஜக நகர செயலர் ஜி.சங்கரசுப்பிரமணியம், கே.குற்றாலநாதன், ஆசிர்வாதம் ஆச்சாரி, வி.எஸ்.சந்திரலேகா ஐ.ஏ.எஸ்., ஏ.ராஜமாணிக்கம் ஆகியோர் பேசினர்.
பாஜக தேசியக் குழு உறுப்பினர் எஸ்.வி.அன்புராஜ் வரவேற்றார். செங்கோட்டை நகர பாஜக செயலர் வாசன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com