வன விலங்குகளால் வதைபடும் விவசாயிகள்!
திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து மற்றும் சுற்று வட்டாரங்களில் மான் உள்ளிட்ட வன விலங்குகள் தொடர்ந்து வேளாண் பயிர்களை நாசப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து மற்றும் சுற்று வட்டாரங்களில் மான் உள்ளிட்ட வன விலங்குகள் தொடர்ந்து வேளாண் பயிர்களை நாசப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளில் சிலர், வேளாண்மை செய்வதையே நிறுத்திவிட்டதாகவும், வன விலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
தாழையூத்து மற்றும் பள்ளிக்கோட்டை பகுதிகளில் பரந்து விரிந்த பரம்புகள் (குன்றுகள்) உள்ளன. இங்கு மான், மிளா போன்ற வன விலங்குகள் காணப்படுகின்றன. கங்கைகொண்டான் மான்கள் சரணாலயம் சிதிலமடைந்துவிட்டதால், அங்கிருந்து வெளியேறிய மான்கள் பரம்பு பகுதியில் தஞ்சம் புகுந்து பெருகிவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு பன்றிக் காய்ச்சல் பரவியதன் எதிரொலியாக மாநகரப் பகுதிகளில் சுற்றித் திரிந்த பன்றிகளை மாநகராட்சி அலுவலர்கள் பிடித்து தாழையூத்து பரம்பு பகுதிகளில் விட்டனர். அந்தப் பன்றிகள் இப்போது பெரிய அளவில் பெருகி கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.
பரம்பு பகுதியில் வாழும் மான்கள், மிளாக்கள், பன்றிகள் ஆகியவை தங்களின் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக தாழையூத்து, தென்கலம், நாஞ்சான்குளம், பள்ளமடை, அளவந்தான்குளம், பிள்ளையார்குளம், தெற்கு செழியநல்லூர் சுற்று வட்டாரங்களில் உள்ள விளைநிலங்களுக்கு இரவு நேரங்களில் படையெடுக்கின்றன. அங்கு பயிரிடப்பட்டுள்ள பருத்தி, நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்களை தின்று தீர்த்துவிடுகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறார்கள்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக...
வன விலங்குகளை கட்டுப்படுத்துமாறு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருவதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கிணறுகளில் போதுமான நீர் இருந்தும் வன விலங்குகளுக்கு பயந்து பலர் விவசாயம் செய்யாமல் இருக்கின்றனர். விவசாயம் செய்தவர்களோ, வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக இரவில் நிலங்களில் காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். சில நேரங்களில் பன்றிகளால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கைவிடப்படும் விவசாயம்: இது தொடர்பாக தென்கலம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரும், விவசாயியுமான கே.நடராஜன் கூறியதாவது: தாழையூத்து மற்றும் பள்ளிக்கோட்டை பரம்பு பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மான்கள் இருக்கின்றன. இதுதவிர மிளாக்கள், பன்றிகளும் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகும் மான்கள், பருத்தியை முற்றிலுமாக மேய்ந்துவிடுகின்றன. உளுந்து பயிர்களை மிளாக்கள் தொடர்ந்து நாசம் செய்து வருகின்றன. நெற்பயிர்களுக்குள் புகும் பன்றிகள் அதை சிதைத்து முற்றிலுமாக நாசப்படுத்தி வருகின்றன. நாங்கள் வேலி அமைத்துத்தான் பயிர் செய்து வருகிறோம். ஆனால் மான்கள் மிக எளிதாக வேலியைத் தாண்டி விளைநிலத்துக்குள் புகுந்துவிடுகின்றன. பன்றிகள் தரையை துளைத்து வருகின்றன.
விவசாயம் லாபம் இல்லாத தொழிலாக மாறிவிட்ட நிலையில், வன விலங்குகளும் அழிப்பதால் முதலுக்கே மோசம் வந்துவிடுகிறது. இதனால் எங்கள் பகுதிகளில் சிலர் வேளாண்மை செய்வதையே நிறுத்திவிட்டனர். வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இழப்பீடு மிக சொற்பமாக இருக்கிறது. பரம்பு பகுதியைச் சுற்றி இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் சார்பில் கம்பி வேலி அமைக்கப்படவிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.
மிரட்டும் பன்றிகள்: தென்கலம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் கூறுகையில், "நாங்கள் மல்லிகை பயிரிட்டுள்ளோம். முற்றிலுமாக வேலி அமைத்திருந்தாலும், இரவிலும் காவலுக்கு இருந்தே ஆக வேண்டும். இல்லையெனில் பன்றிகள் புகுந்து முற்றிலுமாக அழித்துவிடும். பன்றிகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. அவற்றை விரட்டும் மனிதர்களையே எதிர்த்து நிற்கின்றன. சில நேரங்களில் காவலுக்கு பயன்படுத்தும் நாய்களையே பன்றிகள் அடித்துக் கொன்றுள்ளன. ஒவ்வொரு நாளும் வன விலங்குகளிடம் இருந்தும், பன்றிகளிடம் இருந்தும் எங்கள் பயிர்களை பாதுகாப்பது மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது' என்றார்.
பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரலாம்: மாவட்ட வன அலுவலர்
வன விலங்குகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் திருமாலிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: வன விலங்குகளை கட்டுப்படுத்த முயற்சி எடுக்கப்படும். வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வனத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் சார்ந்த பகுதியில் உள்ள வனச்சரகர் மூலமாக இழப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ், வன விலங்குகளால் ஏற்பட்ட பாதிப்பை வேளாண் அலுவலரைக் கொண்டு மதிப்பீடு செய்த சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். அதன்பிறகு வனத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்யப்பட்டு இழப்பீடு வழங்கப்படும்.
வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிருக்கேற்றவாறு இழப்பீடு வழங்கப்படுகிறது. சில பயிர்களுக்கு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. இதுவரை இழப்பீடு கோரிய அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. எதுவும் நிலுவையில் இல்லை. எனவே மாவட்டம் முழுவதும் வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் இழப்பீடு கோரி விண்ணப்பித்து பயனடையலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...