திரிசங்கு நிலையில் தாமிரவருணி பாசன விவசாயிகள்!

தாமிரவருணி பாசனத்திற்கு அணையில் இருந்து நான்கில் ஒரு பகுதி நிலங்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டதால், நிகழ் கார்

தாமிரவருணி பாசனத்திற்கு அணையில் இருந்து நான்கில் ஒரு பகுதி நிலங்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டதால், நிகழ் கார் பருவத்தில் முழுமையாக சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தாமிரவருணி பாசனத்தில் பாபநாசம் அணையின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 11 கால்வாய்கள் வழியாக 86,107 ஏக்கர் நிலங்களும், மணிமுத்தாறு அணையின் மூலம் 24,834 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெற்று வருகின்றன. இதில், மணிமுத்தாறு அணையில் 40 அடிக்கு மேல் நீர் இருப்பு இருந்தால் பெருங்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதுண்டு. 80 அடி பிரதான கால்வாய் மூலம் நான்கு ரீச் குளங்கள் மூலம் பாசனம் பெற்று வரும் நிலங்களுக்கு அணையில் 80 அடிக்கு மேல் அதாவது நீர் இருப்பு 100 அடியை எட்டினால் மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும்.
இப்பாசனத்தில் கார் பருவ சாகுபடிக்கு ஜூன் முதல் தேதியிலும், பிசான பருவ சாகுபடிக்கு நவம்பர் முதல் வாரத்திலும் தண்ணீர் திறக்கப்படுவது நடைமுறையில் இருந்து வந்தது. அணைகளின் நீர்இருப்பை பொறுத்து இப்பாசனத்தில் முன்கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவதுண்டு. கடந்த சில ஆண்டுகளாக பருவம் தவறி பெய்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்ட அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில் பாசனத்துக்கும் முறையாக தண்ணீர் திறக்கப்படுவதில்லை. வழக்கமாக ஜூன் முதல் தேதியில் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்பதால், விவசாயிகள் மே மாதம் 3 ஆவது வாரத்தில் நாற்று பாவும் பணியைத் தொடங்கி விடுவர். ஆனால், பாசனத்துக்கு முறையாக தண்ணீர் திறக்காததால் சாகுபடி பருவமும் தள்ளிப் போகிறது. 
அணையில் இருந்து தண்ணீர் திறந்த பிறகே சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிகழாண்டு கார் பருவ சாகுபடிக்கு ஜூன் 24 இல் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மூலம் பாசனம் பெற்று வரும் 86,107 ஏக்கர் நிலங்களுக்கும் தண்ணீர் வழங்காமல், 20,729 ஏக்கர் நிலங்களுக்கு மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. அதாவது, வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கோடகன் கால்வாய், பாளையம் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் ஆகிய 7 கால்வாய்களில் நான்கில் ஒரு பகுதி நிலங்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
பாசனக் கால்வாய்களில் குறிப்பிட்ட குளங்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பிற பகுதியிலுள்ள விவசாயிகள் நிகழாண்டு கார் பருவ சாகுபடி செய்ய முடியுமா என்ற அச்சத்தில் உள்ளனர். சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் ஏற்படும் தாமதத்தால் நெல் அறுவடையும் தாமதமாகி, வடகிழக்கு பருவ மழையின்போது நீரில் மூழ்கும் சூழல் உள்ளது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 93 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 103.21 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.73 அடியாக உள்ளதால் அனைத்து கால்வாய்களிலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.
இது குறித்து முன்னாள் பேரவை உறுப்பினரும், மணிமுத்தாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவருமான பா. வேல்துரை கூறியது:  பாபநாசம் அணையில் 93 அடி நீர் இருப்பு இருந்தபோதிலும் கார் பருவ சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் திறக்கப்படவில்லை. சரியான நீர் மேலாண்மை இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோடை காலத்தில் அணைகளில் நீரை சேமித்து வைக்காமல் வீணாக திறந்து விடப்படுகிறது. குடிநீர், பாசனத் தேவைக்கு ஏற்ப நீரை வழங்காமல் வீணாக திறக்கப்படுவதால் சாகுபடி பருவத்தில் தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் குறைந்து வருகிறது.
ஏற்கெனவே, ஆய்வு செய்யப்பட்ட எலுமிச்சையாறு அணைக்கட்டு திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை. புதிய தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் இல்லை. பொதுப்பணித் துறையில் கடைநிலை ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் கால்வாய், குளங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை.
ஆகவே, விவசாயத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலர் ஆர். கசமுத்து :  கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோதிலும் கால்வாய்களில் தாமதமாக மேற்கொண்டுள்ள மராமத்துப் பணிகளால் பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. கால் அடைப்பு காலமான ஏப்ரல், மே மாதங்களில் கால்வாய்களில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளாமல், பாசனத்துக்கு தண்ணீர் திறந்த பிறகு மராமத்துப் பணிகள் செய்வதால் எந்த பயனும் இல்லை என்றார் அவர்.
மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலர் பி. வேலுமயில்: திருநெல்வேலி மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் முறையாக நடைபெறவில்லை. முறையான மராமத்துப் பணிகள் செய்யாததால் கடை மடைகளுக்கு தண்ணீர் எட்டுவதில்லை. நீர்வரத்து கால்வாய்களில் தூர்வாரும் பணிகளும் செய்யாததால் தண்ணீர் கிடைத்தும் பாசனம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கார் சாகுபடிக்கு அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றார் அவர்.
வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய் நீர்ப்பாசன சங்க முன்னாள் தலைவர் க. சுப்பிரமணிய மழவராயர் கூறியது: பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து ஏழு கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு முழுமையாக தண்ணீர் திறக்க வேண்டும். நெல் நடவுப் பணி முடிந்து கதிர் வரும் பருவத்தில் அணைகளில் நீர் இருப்பை பொறுத்து சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கினாலே போதுமானது.
மழை குறைந்து வரும் சூழலில் தாமிரவருணி பாசனத்தில் சாகுபடியும் குறைந்து வருகிறது. தற்போது அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் திறக்கலாம் என்றார் அவர்.


"நடவடிக்கை  எடுக்கப்படும்'
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியது: கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யும் போது அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருந்தது. தற்போது பிரதான அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்திருப்பதால் பாசனத் தேவையை கருத்தில் கொண்டு பிற கால்வாய்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com