திருநெல்வேலி மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல் தலைமுறை தொழில்முனைவோர் சுயதொழில் தொடங்குவதற்காக புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் இளங்கலை பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் தொழிற்பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 35 வயதிற்கு மிகாமலும், பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 45 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானத்திற்கு உச்ச வரம்பு இல்லை. இத்திட்டத்தில் சேவை மற்றும் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடனுதவி அளிக்கப்படுகிறது.
தகுதியான நபர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழுவினரால் நேர்காணல் நடத்தப்பட்டு வங்கி மூலம் கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்படுதுடன், ஒரு மாத கால தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். பின்னர் திட்ட மதிப்பில் 25 சதவீதம் அல்லது ரூ.25 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்படும்.
முறையாக கடனை திருப்பிச் செலுத்தும்பட்சத்தில், பின் முனை வட்டி மானியமாக 3 சதவீதம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான நபர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.