இந்தியாவில் பட்டியலின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட காங்கிரஸ் கட்சி ஆற்றியுள்ள பணி அளப்பரியது என்றார் காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது: தென்மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு பலமாக உள்ளது. அதனை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் பட்டியலின மக்களை அதிகளவில் சேர்க்கத் தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
இந்தியாவில் பட்டியலின மக்களுக்கு பல்வேறு மேம்பாட்டுத்திட்டங்களை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. பொருளாதார மேம்பாட்டுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வகுத்துக்கொடுத்த உட்கூறு திட்டங்கள் உதவின. அனைத்து தரப்பு மக்களையும் எவ்வித பாகுபாடும் இன்றி அரவணைத்துச் செல்லும் ஆற்றல் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இந்த விழிப்புணர்வை கிராமங்கள்தோறும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நோக்கோடு வழக்குகளைப் பதிவதும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது. கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பாஜக அரசு தயக்கம் காட்டுகிறது. எல்லா மாநிலத்திற்கும் பொதுவான ஒரு மத்திய அமைச்சரே ஒருதலைப்பட்சமாக கருத்துக் கூறுவது வேதனையளிப்பதாக உள்ளது. தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த இயலாத சூழலில் உள்ளதை பல்வேறு சம்பவங்கள் காட்டுகின்றன.
செம்மொழியாகவும், பழமையான மொழியாகவும் திகழும் தமிழைத் தாழ்த்தும் மத்திய அரசின் செயல்கள் கண்டிக்கத்தக்கது. தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழுக்களாக தொண்டர்கள் செயல்பட்டாலும், தேசிய தலைவர் ராகுல் காந்தி சுட்டிக்காட்டும் மாநில நிர்வாகிகளுடன் ஒத்துழைப்பதும், கட்சி மேம்பாட்டுக்கு உழைப்பதும் அவசியம்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் தென்மண்டல மாநாடு விரைவில் திருநெல்வேலியில் நடைபெறும். அதில் தேசிய எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றார் அவர்.
முன்னதாக காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு, மாவட்டத் தலைவர்கள் கே.சங்கரபாண்டியன், எஸ்.கே.எம்.சிவக்குமார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் உ.ராஜீவ் காந்தி, வி.பி.துரை, வாகை.கணேசன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவுத் தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.