கல்லூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை
கல்லூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பற்றாக்குறையால், நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.


கல்லூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பற்றாக்குறையால், நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
பேட்டையை அடுத்த கல்லூரில் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், ஆய்வகம், ரத்த சேமிப்பு வங்கி, ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் உள்ளன. கல்லூர் சுற்று வட்டாரம், சங்கன்திரடு, பழவூர், கொண்டாநகரம், சுத்தமல்லி , பாரதி நகர், பேட்டை, திருப்பணி கரிசல்குளம், வெட்டுவான்குளம், சீதபற்பநல்லூர், மாறாந்தை, வெள்ளாளன்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நோயாளிகள் கல்லூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். தினந்தோறும் சராசரியாக 200 முதல் 250 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். திங்கள்கிழமைகளில் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோயாளிகள் சுமார் 300 பேர் வருகிறார்கள். செவ்வாய், புதன்கிழமைகளில் சுமார் 100 முதல் 150 கர்ப்பிணி பெண்கள் பல்வேறு பரிசோதனைகளுக்காக வருகிறார்கள். மாதத்துக்கு 30 முதல் 36 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன. மாதத்துக்கு 6,000 முதல் 7,500 பேர் வரை வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள்.
செவிலியர் பற்றாக்குறை: இங்கு 5 மருத்துவர்களும், 4 செவிலியர்களும் மட்டுமே இருக்கிறார்கள். ஒரு செவிலியர் வார விடுமுறை எடுக்கும்பட்சத்தில் காலையில் ஒருவர், பிற்பகலில் ஒருவர், இரவில் ஒருவர் பணியில் இருக்கிறார்கள். காலை நேரங்களில் ஒரு செவிலியர் மட்டும் இருக்கும்பட்சத்தில், அவர்தான் வெளிநோயாளிகளுக்கு ஊசி போடுதல், கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனைகள் செய்தல் என அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
முதல்முறையாக சோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களின் விவரங்கள் பிக்மி என்ற மென்பொருளில் பதிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு உயரம், எடை, ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்படுகின்றன. ஏற்கெனவே வந்து கொண்டிருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை அளவு, யூரியா அளவு, அல்ட்ரா சவுண்ட், அல்புமின் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும், கவுன்சிலிங்கும் வழங்கப்படுகிறது.
ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது. இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கு சத்து ஊசி போடப்படுகிறது. சில நேரங்களில் பிரசவமும் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவையனைத்தையும் ஒரே செவிலியர் கவனிக்கிறபோது, வெளிநோயாளிகளும், கர்ப்பிணி பெண்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
காத்திருக்கும் நோயாளிகள்: இதுகுறித்து வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்திருந்த கணேஷ் என்பவர் கூறுகையில், 5 செவிலியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 4 பேர் மட்டுமே இருப்பதாக கூறுகிறார்கள். பெரும்பாலான நாள்களில் காலையில் ஒரு செவிலியர் மட்டுமே இருக்கிறார். இதனால் சில நேரங்களில் ஊசி போடுவதற்கு ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் எரிச்சலடைகிறார்கள். செவிலியர்களும் கூடுதல் பணிச்சுமையில் இருக்கிறார்கள். அவர்களையும் எதுவும் சொல்ல முடியவில்லை. எனவே கூடுதல் செவிலியர்களை நியமித்தால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மருத்துவமனை அருகேயுள்ள அரசு பள்ளியில் அவ்வப்போது திருட்டு சம்பவம் நடைபெற்று வரும் நிலையில், மருத்துவமனையில் இரவில் தங்குவதற்கு அச்சமாக உள்ளது; அதனால் பாதுகாவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் தெரிவித்தனர்.
செவிலியர் நியமனம்: துணை இயக்குநர்
இது தொடர்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, கல்லூர் மருத்துவமனையில் ஒரு செவிலியர் தற்போது மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளார். நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காலையில் இரு செவிலியர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை காலிப்பணியிடத்துக்கு ஒரு செவிலியர் உடனடியாக நியமிக்கப்படுவார்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...