திருநெல்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து, சுசீலா தம்பதியின் மகன் பால்துரை (18). கட்டடத் தொழிலாளி.
கருத்து வேறுபாடு காரணமாக மாரிமுத்து வீரமாணிக்கபுரத்திலும், சுசீலா மேலப்பாலாமடையிலும் வசித்து வருகின்றனர். பால்துரை தன் தாயுடன் வசித்து வந்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற உறவுக்காரப் பெண்ணைப் பார்ப்பதற்காக மகன் பால்துரையுடன் சுசீலா சனிக்கிழமை சென்றார். பின்னர், அங்கிருந்து இருவரும் பேருந்தில் வீட்டுக்குப் புறப்பட்டனராம். ஆனால், பால்துரை பாதிவழியில் இறங்கி விட்டாராம்.
இந்நிலையில், பால்துரை கொலை செய்யப்பட்டு, அவரது தலை மேலப்பாலாமடையில் உள்ள கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வைக்கப்பட்டிருந்தது.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே. அருண்சக்திகுமார், தாழையூத்து டி.எஸ்.பி. பொன்னரசு மற்றும் போலீஸார் விரைந்து சென்று தலையை மீட்டனர்.
மேலப்பாலாமடையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் ராஜவல்லிபுரம் தாமிரவருணி ஆற்றங்கரையில் இருந்து பால்துரையின் உடல் மீட்கப்பட்டது. அவற்றை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. விரல் ரேகை நிபுணர்கள், தலை இருந்த இடத்தில் தடயங்களை பதிவு செய்தனர்.
பால்துரை கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சந்தேகத்தின்பேரில் மூவரை போலீஸார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு பாட்டியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் பால்துரை கைது செய்யப்பட்டார். திருநெல்வேலியிலுள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




