ரூ.1.7 கோடியில் மருதூர் அணைக்கட்டை பலப்படுத்தும் பணி தீவிரம்!
வட கிழக்குப் பருவமழை காலத்துக்கு முன்னதாக ரூ.1.7 கோடி மதிப்பில் மருதூர் அணைக்கட்டை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


வட கிழக்குப் பருவமழை காலத்துக்கு முன்னதாக ரூ.1.7 கோடி மதிப்பில் மருதூர் அணைக்கட்டை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தாமிரவருணி நதியில் 7-ஆவது அணைக்கட்டாக, திருநெல்வேலி மாவட்டம் மருதூரில் அமைந்துள்ளது மருதூர் அணைக்கட்டு. விவசாயத்துக்கு மட்டுமின்றி, குடிநீருக்கும் நீர் வார்க்கும் பழமைமிக்க இந்த அணைக்கட்டு 4,097 அடி நீளம் கொண்டது. இந்த அணைக்கட்டு 1507-ஆம் ஆண்டு நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டது.
மருதூர் அணையில் இருந்து மேலக்கால்வாய், கீழக்கால்வாய் என இரண்டு கால்வாய்கள் பிரிந்து செல்கின்றன. மேலக்கால்வாய் மூலம் முத்தாலங்குறிச்சி குளம், குட்டக்கால் குளம், கொல்லிவாய் குளம், நாட்டார் குளம், செய்துங்கநல்லூர் குளம், தூதுகுழி குளம், கருங்குளம், பொட்டைக்குளம், கால்வாய் குளம், தென்கரை குளம், வெள்ளூர் குளம், நொச்சிக் குளம், கீழ புதுக்குளம், முத்துமாலை குளம், வெள்ளரிகாயூரணி குளம், தேமாங்குளம் ஆகிய 16 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. கீழக்கால்வாய் மூலம் செந்திலாம்பண்ணை, பட்டர் குளம், ஸ்ரீவைகுண்டம் கஸ்பா, பேரூர், சிவகளை, பெருங்குளம், பத்மநாபமங்கலம் கீழக்குளம், பாட்டக்குளம், ரெங்கநாதன் புதுக்குளம், எசக்கன் குளம், கைலாசப்பேரி, தருமனேரி, நெடுங்குளம் உள்ளிட்ட 15 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இரு கால்வாய்கள் மூலம் மொத்தம் 31 குளங்கள் பயனடைகின்றன. மருதூர் அணைக்கட்டால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிராமங்கள் பயன் பெறுகின்றன. சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பலப்படுத்தும் பணி: இந்த அணையின் சுவர் வழியாக தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதால், அணையில் தண்ணீர் தேக்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீர் வள, நில வள திட்டம் பகுதி-2-ன் கீழ் அணையை பலப்படுத்தும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அணையில் சுமார் 1,280 மீ. நீளத்துக்கு ஏற்கெனவே உள்ள சுவரை ஒட்டி உள்புறமாக சுமார் 1.75 மீ உயரத்துக்கு கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நவீன தொழில்நுட்பம்: இது தொடர்பாக தாமிரவருணி வடி நிலக் கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: மருதூர் அணைக்கட்டு சுவரில் சிறு சிறு துவாரங்கள் ஏற்பட்டு நீர்க்கசிவு இருந்தது. இதனால் அணையிலிருந்து தொடர்ச்சியாக நீர் வெளியேறியது. அணையிலிருந்து தொடர்ந்து நீர் கசியும்போது அணை பலமிழக்கும் அபாயம் உள்ளது. இதையடுத்து அணையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது நீர் வள, நில வள திட்டத்தின் கீழ் ரூ.1.7 கோடி மதிப்பில் "ஸ்கின் வால்' தொழில்நுட்பத்தின்படி 1,280 மீ. நீளத்திற்கு அணையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது, அணையின் உள்புறமாக தரைமட்டத்திலிருந்து 2 அடி உயரத்துக்கு 85 செ.மீ. தடிமன் கொண்ட கான்கிரீட் சுவரும், அதற்கு மேல் 20 செ.மீ. தடிமன் கொண்ட கான்கிரீட் சுவரும் எழுப்பப்படுகின்றன. இந்த சுவர் மழை வெள்ளத்தின்போது சேதமடையாமல் இருப்பதற்காக, ஏற்கெனவே அணையில் உள்ள பழைய சுவருடன் இரும்புக் கம்பி மூலம் இணைக்கப்படுகிறது. இந்தப் பணிகள் வட கிழக்குப் பருவ மழை காலத்துக்கு முன்னதாக முடிக்கப்பட்டுவிடும்.
இதன் பிறகு அணையிலிருந்து நீர்க் கசிவு முற்றிலுமாக தடுக்கப்படும். இதனால் மேலக்கால், கீழக்கால் விவசாயிகளுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். மேலும் மருதூர் அணைக்கட்டு பகுதியிலிருந்துதான் தூத்துக்குடி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் செல்கிறது. எனவே தூத்துக்குடி மாவட்டத்துக்கும் தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...