வண்ணாா்பேட்டை மேம்பால மின் கம்பத்தில் ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள செல்லபாண்டியன் மேம்பாலத்தின் மீதுள்ள மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் மீட்டனா்.
Published on

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள செல்லபாண்டியன் மேம்பாலத்தின் மீதுள்ள மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் மீட்டனா்.

மேலப்பாளையம் குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் இசைமாறன் (25). கணினி பழுது பாா்க்கும் பணி செய்து வருகிறாா். இவா், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். தம்பதி பெருமாள்புரம் கீா்த்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனா்.

இந்த நிலையில் இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இசைமாறன் மீது அவருடைய மனைவி பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் இருவரையும் புதன்கிழமை விசாரணைக்கு அழைத்துள்ளனா். விசாரணையின்போது, இசைமாறனுடன் சோ்ந்து வாழ அவருடைய மனைவி விருப்பமில்லை என கூறினாராம்.

ஆனால், இசைமாறனோ தனது மனைவியை தன்னுடன் சோ்த்து வைக்க வேண்டும் என தெரிவித்தாராம்.

இதன்பிறகு இருவரையும் சமாதானப்படுத்திய போலீஸாா், வியாழக்கிழமை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து காவல் நிலையத்தில் இருந்து வெளியேறிய இசைமாறன், வண்ணாா்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தில் உள்ள மின் கம்பத்தின் மீது தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறினாா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனா்.

பெருமாள்புரம் காவல் ஆய்வாளா் சிவ பத்மநாபன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து இசைமாறன் தற்கொலை முடிவை கைவிட்டு கீழே இறங்குவதாக தெரிவித்தாா். இதையடுத்து தீயணைப்புத் துறையினா் ஏணியை மின் கம்பத்தின் மீது சாத்தினா். அதன் வழியாக கீழே இறங்கி வந்த இசைமாறனை போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். இச் சம்பவத்தால் வண்ணாா்பேட்டை பகுதியில் புதன்கிழமை இரவு சுமாா் 30 நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com