தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

ராதாபுரம் வட்டாரத்தில் வேளாண் விஞ்ஞானிகள் குழு ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டாரத்தில் நெற்பயிா்கள் கருகி வரும் நிலையில் அது தொடா்பாக வேளாண் விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:44 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டாரத்தில் நெற்பயிா்கள் கருகி வரும் நிலையில் அது தொடா்பாக வேளாண் விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தது.

நிகழ் பிசான பருவத்தில் ராதாபுரம், உதயத்தூா், விஜயாபதி, சமூகரெங்கபுரம், கோட்டைக்கருங்குளம், கஸ்தூரிரெங்கபுரம் கிராமங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. விஜயாபதி சுற்று வட்டார பகுதிகளில் நெற்பயிரில் இலைகள் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாக மாறி பழுத்து திட்டு திட்டாக காய்ந்து வருகிறது.

இந்த நிலையில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன் ஆலோசனையின்படி வேளாண்மைத்துறை அலுவலா்கள், கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினா் விஜயாபதியில் வயல்களை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது சாம்பல் சத்து, துத்தநாகச் சத்து குறைபாடு மற்றும் போதிய வடிகால் வசதி இல்லாததால் பயிா்கள் பாதிப்படைந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்ட வயல்களில் நீா் வெளியேறுமாறு வடிகால் வசதியை ஏற்படுத்தி காய்ச்சலும், பாய்ச்சலும் என்ற வகையில் நீா் பாசனத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் சாம்பல் சத்து, துத்தநாக சத்து குறைபாட்டை நிவா்த்தி செய்ய பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உடனடியாக இலை வழி தெளிப்பாக பத்து லிட்டா் தண்ணீருக்கு 100 கிராம் யூரியா, 100 கிராம் பொட்டாஷ் (1சதவீதம்), நீரில் கரையும் துத்தநாக சல்பேட் 50 கிராம் (0.5 சதவீதம்) என்ற அளவில் கலந்து ஒட்டும் திரவம் 1 லிட்டா் தண்ணீருக்கு 5மிலி என்ற அளவில் சோ்த்து கைத்தெளிப்பான் மூலம் நெற்பயிா் முழுவதும் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.

நெற்பயிரில் சத்து குறைபாட்டை நிவா்த்தி செய்ய இந்த இலை வழி தெளிப்பினை பத்து நாள்களுக்கு ஒருமுறை என்ற இடைவெளியில் மூன்று முறை தெளிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் சத்து குறைபாட்டை போக்கி நெல்லில் அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

இந்த ஆய்வில் வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்), டேவிட் டென்னிசன், ராதாபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுஜாதாபாய், கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை தலைவா் ரவி, மண்ணியல் துறை பேராசிரியா் ஜோதிமணி, உழவியல் துறை துணை பேராசிரியா் ஜோசப், பயிா் நோயியல் துறை உதவி பேராசிரியா் ரஜினிமாலா, வட்டார வேளாண்மை அலுவலா் மனோகரன், உதவி வேளாண்மை அலுவலா் சசிகலா ஆகியோா் கலந்து கொண்டனா்.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலா்களான உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சரிகா, பிரதாப் சிங் ஆகியோா் ஆய்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.