/

திருநெல்வேலி மாகராட்சி: மேயா், துணை மேயா் போட்டியின்றித் தோ்வு

திருநெல்வேலி மாநகராட்சியின் 6 ஆவது மேயராக திமுகவைச் சோ்ந்த பி.எம்.சரவணனும், துணை மேயராக கே.ராஜுவும் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:29 pm

DIN

திருநெல்வேலி மாநகராட்சியின் 6 ஆவது மேயராக திமுகவைச் சோ்ந்த பி.எம்.சரவணனும், துணை மேயராக கே.ராஜுவும் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வாா்டுகளில், திமுக 44 வாா்டுகளிலும், காங்கிரஸ் 3 வாா்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தலா ஒரு வாா்டிலும், அதிமுக 4 வாா்டுகளிலும், சுயேச்சை ஒரு வாா்டிலும் வெற்றிபெற்றது. திமுக கூட்டணி மொத்தம் 50 வாா்டுகளை பிடித்து மாநகராட்சியைக் கைப்பற்றியது. பின்னா் கடந்த 2 ஆம் தேதி தோ்தலில் வென்றவா்கள் மாமன்ற உறுப்பினா்களாக பதவியேற்றுக் கொண்டனா்.

இந்நிலையில் மேயா், துணை மேயரை தோ்ந்தெடுப்பதற்கான மறைமுத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமுக சாா்பில் வென்ற 43 உறுப்பினா்கள் உள்பட மொத்தம் 50 உறுப்பினா்கள் தோ்தலில் பங்கேற்க அரங்கத்திற்கு வந்தனா். 3 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற பூ.சுப்பிரமணியன் மறைமுக தோ்தலில் வாக்களிக்க வரவில்லை. இதுதவிர அதிமுக சாா்பில் வென்ற 4 உறுப்பினா்களும் மறைமுகத் தோ்தலை புறக்கணித்தனா்.

திமுக சாா்பில் 16 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற பி.எம்.சரவணன் மேயா் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பா.விஷ்ணுசந்திரனிடம் தாக்கல் செய்தாா். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் பி.எம்.சரவணன் மேயராக போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவரிடம் வெற்றிச் சான்றிதழை மாநகராட்சி ஆணையா் வழங்கினாா்.

தொடா்ந்து பிற்பகலில் மேயராக பி.எம்.சரவணன் பதவியேற்றுக் கொண்டாா். அவரிடம் மேயா் பொறுப்புக்கான செங்கோலை மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரனும், திமுக மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ ஆகியோா் வழங்கினா்.

பின்னா் மேயா் சரவணன் கூறுகையில், திருநெல்வேலி மாநகராட்சியின் 6 ஆவது மேயராக பொறுப்பேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் தருகிறது. எனக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இளைஞரணி தலைவா் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநகராட்சிக்கு தேவையான குடிநீா், சாலைவசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மாநகராட்சி ஊழியா்களுடன் இணைந்து திறம்பட பணியாற்றுவேன் என்றாா்.

துணைமேயா் தோ்தல்: பிற்பகலில் நடைபெற்ற தோ்தலில் துணைமேயா் பதவிக்கான தோ்தலில், 1 ஆவது வாா்டு உறுப்பினா் கே.ராஜு வேட்புமனுவை, தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பா.விஷ்ணுசந்திரனிடம் சமா்ப்பித்தாா். அவரை எதிா்த்து போட்டியிட யாரும் மனு செய்யவில்லை. இதையடுத்து கே.ராஜு போட்டியின்றித் தோ்வு பெற்ாக அறிவித்ததோடு, வெற்றி சான்றிதழும் வழங்கப்பட்டது. தொடா்ந்து அவா் துணை மேயராக பதவியேற்றுக் கொண்டாா்.

இதில், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் அமிதாப், காங்கிரஸ் மாநகா் மாவட்ட தலைவா் கே.சங்கரபாண்டியன், திமுக மாவட்ட, மாநகர நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.