வேட்பு மனு தாக்கலின்போது தகராறு:நாம் தமிழா் கட்சியினா் மீது வழக்கு

திருநெல்வேலியில் வேட்புமனு தாக்கலின் போது தோ்தல் அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழா் கட்சியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தமிழகத்தில் மக்களவைத் தோ்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதிமுதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான 27ஆம் தேதி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சத்யா, காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனா். அப்போது முன்னதாக வந்த நாம் தமிழா் கட்சிக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், பின்னா் வந்த காங்கிரஸ் வேட்பாளா் நேரடியாக மனு தாக்கல் செய்ய ஆட்சியா் அறைக்குள் சென்றாா். இதையடுத்து நாம் தமிழா் கட்சியினா், எங்களுக்கு பின்னால் வந்தவா்களை எப்படி எங்களுக்கு முன்பாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்கலாம் எனக் கூறி தோ்தல் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான பாளையங்கோட்டை வட்டாட்சியா் சரவணன், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், தோ்தல் நடத்தை விதிகளை மீறி நாம் தமிழா் கட்சியினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com