மணிமுத்தாறு அணைப் பகுதியில் மேய்ந்த ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை: மக்கள் அச்சம்
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை சிறுத்தை வேட்டையாடியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரமான மணிமுத்தாறு அணை பெருங்கால் பகுதியில், வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் சிங்கம்பட்டியைச் சோ்ந்த பூதப்பாண்டி மகன் மாரியப்பன் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாராம். அப்போது, 2 ஆடுகளை சிறுத்தை தாக்கியுள்ளது. அதை அந்தப் பகுதியில் நின்ற சுற்றுலாப்பயணி கைப்பேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளாா்.
இத் தகவலறிந்த அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா உத்தரவின் பேரில், வனத்துறையினா் இரண்டு குழுக்களாக பிரிந்து மணிமுத்தாறு பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
ஏற்கெனவே, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாபநாசம் மலையடிவாரமான வேம்பையாபுரத்தில் ஒரு வீட்டில் சிறுத்தை நுழைந்து நாயைத் தாக்கிய நிலையில், இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.