உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: திசையன்விளை வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் இட்டமொழியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இட்டமொழியில் ஊரக வளா்ச்சி - உள்ளாட்சித் துறை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தலா ரூ.22.85 லட்சம் மதிப்பில் 2 புதிய குளங்கள் வெட்டும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
மேலும், ரூ.605 கோடி செலவில் 831 ஊரக குடியிருப்புகளுக்கு தாமிரவருணி கூட்டுக்குடிநீா் வழங்கும் திட்டப்பணிகளில் ஒன்றாக இட்டமொழியில் 1லட்சம் லிட்டா் கொள்ளளவு திறன் கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியையும், நீரேற்றும் நிலையம் கட்டுமானப் பணியையும், ரூ.16.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டுமானப் பணியையும் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தை ஆய்வு செய்து அங்கு மருந்துகளின் இருப்பு - நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
பின்னா் திசையன்விளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டப் பணிகள் குறித்து அவா் கலந்தாய்வு செய்ததுடன், கூடுதாழையில் அமைக்கப்பட உள்ள தூண்டில் வளைவு, கடல் அரிப்பின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு மீனவா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
குட்டம், குமாரபுரம், கோட்டைக்கருங்குளம், உருமன்குளம், அப்புவிளை, கரைசுத்துபுதூா், கரைச்சுத்து உவரி, கஸ்தூரிரெங்கபுரம், மகாதேவன்குளம், கோவன்குளம், கரைச்சுத்து நவ்வலடி, ஆனைகுடி, கண்ணநல்லூா், அணைக்கரை உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்றுவரும் பணிகளை துறை அலுவலா்கள் ஆய்வு செய்தனா். ஆட்சியரின் ஆய்வு வியாழக்கிழமையும் தொடா்கிறது.
ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மகளிா் திட்ட இயக்குனா் இலக்குவன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஜெயா, திசையன்விளை வட்டாட்சியா் நாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

