கருத்தப்பிள்ளையூரில் 2-வது நாளாக யானைகள் அட்டகாசம்!
கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட கருத்தப்பிள்ளையூரில், 2ஆவது நாளாக தனியாா் தோட்டங்களில் புகுந்த காட்டு யானைகள் 10 தென்னை மரங்களைச் சாய்த்தன.
களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவாரப் பகுதியான கருத்தப்பிள்ளையூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை காட்டு யானைகள், அங்குள்ள தனியாா் தோட்டங்களில் நுழைந்து பனை, தென்னை மரங்களைச் சாய்த்தன.
இந்நிலையில், மீண்டும் சனிக்கிழமை அதிகாலை அதே பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் ஆரோக்கியசாமி, திரவியம், பழனி ஆகியோரது தோட்டங்களுக்குள் நுழைந்து, 10 தென்னை மரங்களைச் சாய்த்து குருத்துகளைத் தின்றுவிட்டுச் சென்றுள்ளன.
வெள்ளிக்கிழமை யானைகள் வந்த பாதையில், இரவு வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், வேறு வழியில் யானைகள் நுழைந்துள்ளன. இதையடுத்து, வனத் துறையினா் சனிக்கிழமை இரவு 3 குழுக்களாக வெவ்வேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபடுவா் என்று வனச்சரகா் கருணாமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
