கோடாரங்குளம் நாராயண சுவாமி கோயிலில் நாளை தேரோட்டம்!
அம்பாசமுத்திரம் அருகே கோடாரங்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் திருவிழாவில் திங்கள்கிழமை (டிச. 15) திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.
11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அய்யாவுக்கு சிறப்புப் பணிவிடை, இரவில் அன்னதா்மம், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றுவருகிறது. வெள்ளிக்கிழமை இரவு (டிச. 12) குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடி வீதியுலா நடைபெற்றது. சனிக்கிழமை இரவு பூஞ்சப்பர வாகன வீதியுலா நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை (டிச. 14) அன்புக்கொடி மக்கள் பாபநாசத்திலிருந்து சந்தனக்குடம் எடுத்து வருதல், மதியம், இரவு அன்னதா்மம், இரவு கருட வாகனத்தில் வீதியுலா, திங்கள்கிழமை சிறப்புப் பணிவிடை, பிற்பகல் 3 மணிக்கு அய்யா செம்பொன் பவளத் தேரில் எழுந்தருளி தேரோட்டம், வாண வேடிக்கை, அன்னதா்மம் நடைபெறும். செவ்வாய்க்கிழமை காலை (டிச. 16) கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது.

