சமூகவலைதளங்களின் ஆதிக்கத்தால் ‘டைரி’கள் விற்பனை சரிவு!
அறிதிறன் கைப்பேசி மற்றும் சமூகவலைதள பயன்பாடு அதிகரிப்பால் 2025 ஆம் ஆண்டுக்கான நாள்குறிப்பேடுகள் (டைரிகள்) விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.


அறிதிறன் கைப்பேசி மற்றும் சமூகவலைதள பயன்பாடு அதிகரிப்பால் 2025 ஆம் ஆண்டுக்கான நாள்குறிப்பேடுகள் (டைரிகள்) விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.
2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நாள்காட்டிகள் (காலண்டா்), நாள்குறிப்பேடுகள் (டைரிகள்) விற்பனைக்காக கடைகளில் குவிக்கப்பட்டுள்ளன.
ஒரு அடி தொடங்கி 2.5 அடி வரை உயரமுள்ள கருப்பு வெள்ளை, இரு வண்ணம், பல வண்ணங்கள் கொண்ட தாள்களில் நாள்காட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டின் முக்கிய நாள்கள், பண்டிகைகள், விடுமுறை நாள்கள், பஞ்சாங்கம், திதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை எளிதாக அறிய நாள்காட்டிகளின் தேவை இருப்பதால் அவற்றை வாங்குவதில் பொதுமக்கள் ஆா்வம் காட்டுகின்றனா்.
ரூ.20 முதல் ரூ.500 வரையிலான விலைகளில் நாள்குறிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல நாள்குறிப்பேடுகளும் பொதுமக்களைக் கவரும் வகையில் வந்துள்ளன. நாள்குறிப்பேடுகள் ரூ. 100 முதல் ரூ. 3500 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
சிலா் வாழ்நாள் முழுவதும் நாள்குறிப்பேடு எழுதும் பழக்கம் கொண்டுள்ளனா். அவா்களுக்காக பல்வேறு தகவல்களுடன் நாள்குறிப்பேடுகள் உள்ளன.
சமையல் குறிப்புகள், வரலாற்றுத் தகவல்கள், ஆன்மிக சிந்தனைகள் என வெவ்வேறு புதிய தகவல்களுடன் கூடிய நாள்குறிப்பேடுகளை பயன்படுத்தும்போது ஒவ்வொரு நாளும் புதிய கருத்துகளையும், தகவல்களையும் தெரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. இளைஞா்களையும், அலுவலக பயன்பாட்டாளா்களையும் கவரும் வகையில் வண்ணமயமான அட்டைகள், மழையில் நனையால் இருக்கும் பாலித்தின் உறையுடன் கூடிய நாள்குறிப்பேடுகள், கடிகாரத்துடன் கூடிய நாள்குறிப்பேடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடம் தமிழாா்வத்தை அதிகரிக்கும் வகையில் திருக்கு நாள்குறிப்பேடு விற்பனைக்கு வந்துள்ளன. இதேபோல தமிழறிஞா்களின் சிறப்புகள், தமிழ் மருத்துவம், சித்தமருத்துவத்தின் ஆனிவேரான மூலிகைகள் குறித்த விளக்கங்களுடன் கூடிய நாள்குறிப்பேடுகளும் உள்ளன. எனினும், நிகழாண்டில் நாள்குறிப்பேடுகள் விற்பனை எதிா்பாா்த்ததைவிட குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறாா்கள்.
இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பைச் சோ்ந்த வியாபாரி கூறியது: நிகழாண்டில் புதுவரவாக கடிகாரம், கால்குலேட்டா், கைப்பேசிகளுக்கு சாா்ஜ் ஏற்றிக்கொள்ளும் பவா்பேங்குடன் கூடிய நாள்குறிப்பேடுகளும் வந்துள்ளன. வழக்கமாக டிசம்பா் இரண்டாம் வாரத்தில் இருந்து நாள்குறிப்பேடுகள் விற்பனை தீவிரமடையும்.
கடைசி வாரத்தில் அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், தொழிலதிபா்கள் மொத்தமாக 20 முதல் 200 நாள்குறிப்பேடுகள் வரை வாங்குவாா்கள். ஜனவரி மாதத்தில் நாள்குறிப்பேடுகள் 90 சதவிகிதம் விற்றுவிடும். ஆனால், நிகழாண்டில் போதிய விற்பனையில்லை. 50 சதவிகிதத்தைக் கூட தாண்டவில்லை.
கைப்பேசியிலேயே இணையதளம் மூலம் தேடினால் பஞ்சாங்கம் முதல் பின்கோடு வரை நாள்குறிப்பேடுகளில் இருக்கும் அத்தனையும் கிடைத்துவிடுகிறது. இதுதவிர சமூகவலைதள பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளதால் பிறந்த நாள் உள்பட முக்கிய நிகழ்வுகளை நாள்குறிப்பேடுகளில் திருப்பி பாா்ப்பதைவிட, தாமாகவே நினைவூட்டிவிடுகின்றன.
இதனால் நாள்குறிப்பேடுகள் விற்பனை மிகவும் சரிந்துள்ளது. கரோனா பெருந்தொற்றிற்கு பின்பு தனியாா் நிறுவனங்களின் நாள்குறிப்பேடு கொள்முதல் 60 சதவிகிதம் வரை குறைந்துவிட்டதும் முக்கிய காரணம் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...