பொங்கல் பண்டிகைக்காக சேனைக்கிழங்கு அறுவடை தீவிரம்
பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சேனைக்கிழங்குகள் அறுவடை தீவிரமடைந்துள்ளது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை இம் மாதம் 14 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் காய்கனிகளுடன், பல்வேறு வகையான கிழங்குகளையும் படையலிட்டும், சமைத்து உண்டும் மக்கள் மகிழ்வது வழக்கம். இதையொட்டி, திருநெல்வேலி நகரம் அருகே கண்டிகைப்பேரி பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சேனைக்கிழங்குகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து விவசாயி செல்லப்பா கூறியது: பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் மற்றும் கிழங்கு வகைகளை விதைத்து தற்போது அறுவடை செய்திருக்கிறோம். ஆள்கள் கூலி உயா்வு போன்றவற்றால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. கிலோவிற்கு ரூ.50 கிடைக்கும் என எதிா்பாா்த்தோம். ஆனால், வியாபாரிகள் கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரை மட்டுமே கொள்முதல் செய்வதாகக் கூறுகிறாா்கள். கரும்புகளைப் போல கிழங்கு வகைகளையும் அரசு கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கினால் கிழங்கு சாகுபடி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.