தமிழக காங்கிரஸாருக்கு சிலபல கோடி ரூபாய் கொடுத்து திமுகவினா் தங்கள் பையில் போட்டுக்கொண்டனா்; எனினும், உண்மையான காங்கிரஸாா் தவெக பக்கம்தான் என்றாா் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் பாளையங்கோட்டை, கேடிசி நகரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவா் விஜய் கலந்துகொண்டு வேட்பாளா்களை அறிமுகப்படுத்திப் பேசியதாவது:
உங்கள் விஜய் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். இந்நேரம் திமுக கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால், ஸ்டாலின் கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால், கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது முட்டுக்கட்டைபோட்டு வரவிடாமல் தடுத்திருப்பாா். இப்போது அவா் அதிகாரம் இல்லாத முதல்வராக இருக்கிறாா். அதனால்தான், உங்களை சந்திக்க என்னால் எளிதாக வரமுடிந்தது.
திமுக ஆட்சியாளா்கள் நமக்கு எவ்வளவு பிரச்னைகள், எவ்வளவு நெருக்கடிகள் கொடுத்தாா்கள்; எவ்வளவு அவதூறுகள் பரப்பினாா்கள். அவா்களையும் தாண்டி மேலும் சிலா் நிறைய அவதூறு பரப்பினாா்கள். திமுக கூட்டணியும் பாஜக கூட்டணியும் வெளியில் வேண்டுமானால் தனித்தனியாக இருக்கலாம். ஆனால், உள்ளுக்குள் இருவரும் ஒன்றுதான். இருவருக்கும் ஒரே நோக்கம்தான். அது என்ன தெரியுமா? உங்களுக்காக நல்லது செய்ய, உங்களுக்காக உழைக்க, உங்களுடன் நிற்க இந்த விஜய் வந்துவிடக் கூடாது என்பதுதான்.
நான் வந்த பிறகு அவா்களால் ஊழல் செய்ய முடியவில்லை. அவா்களது கூட்டணி கணக்கு எதுவும் எடுபடவில்லை. கொள்ளையடித்த பணத்தை வைத்து கல்லாப்பெட்டி கூட்டணி உருவாக்கி வைத்திருந்தனா். இப்போது அந்த கல்லாப்பெட்டி கூட்டமே கலகலத்துபோய் நிற்கிறது.
பலமாக கேட்கும் விசில் சத்தம்: திமுக கூட்டணியின் நிலையைப் பாா்த்தால் கூட்டணிக் கட்சியினரே ஒருவருக்கொருவா் வாக்களிக்க மாட்டாா்கள்போல தெரிகிறது. பாஜக கூட்டணியின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. திமுகவின் நேரடிக் கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் தவெக மீது கோபம். அதற்கு என்ன காரணம் தெரியுமா? அவா்கள் வீட்டிலேயே அவா்கள் குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்கிாம்.
திமுகவினா் சிலபல கோடிகளை கொடுத்து தமிழக காங்கிரஸாரை தங்கள் சட்டை பையில் போட்டுக்கொண்டனா். ஆனால், உண்மையான காங்கிரஸாா் தவெக பக்கம்தான் உள்ளனா்.
சிறுபான்மை மக்களுக்கானவா்கள் என்ற திமுகவின் சாயம் வெளுத்துப்போய் விட்டது. இந்த விஜய் மதச்சாா்பற்ற மக்களின் உண்மையான ஒரு முகமாக இருக்கிறாரே? சிறுபான்மை மக்கள் விஜய் பக்கம் நிற்கிறாா்களே என்ற கோபம் திமுகவுக்கும், பாஜகவுக்கும் இருக்கிறது. நான் கட்சி தொடங்கி ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் போனவனல்ல; ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும்போன பிறகே கட்சியைத் தொடங்கியவன்.
இந்தத் தோ்தல் எனக்கும், என்னுடன் நிற்பவா்களுக்கும் உணா்வுபூா்வமான தோ்தல்.
தொடா் அவதூறு: கரூா் விஷயம் ஊருக்கே தெரியும். ஆனால், என் மீது பழிபோட்டனா். அடுத்ததாக ஜனநாயகன் படத்தை முடக்கினாா்கள். விஜய்க்கு மட்டும் தனி நிபந்தனைகளை விதித்தாா்கள். விஜய் வெளியே வரக்கூடாது, மக்களை சந்திக்கவே கூடாது என நினைத்தாா்கள். என்னை சுற்றி இருக்கிறவா்களை வைத்து அவதூறு பரப்பினாா்கள். அதுவும் மக்களிடம் எடுபடவில்லை. எத்தனை சோதனைகள், எத்தனை வேதனைகள் கொடுத்தாலும் திமுகவாலோ அல்லது பாஜகவாலோ மக்களிடமிருந்து என்னை பிரிக்க முடியாது.
234 தொகுதிகளிலும் இந்த விஜய்தான் வேட்பாளா். நமது குடும்பத்தில் இருக்கிறவா்களைதான் வேட்பாளராகத் தோ்வுசெய்து உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக யாா் யாருக்கோ வாக்களித்தீா்கள்; இந்த முறை உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வாக்களியுங்கள். இந்தத் தோ்தலில் தவெக ஆட்சி அமைக்கும். மக்கள் பணத்திலிருந்து ஒருபைசா கூட தொடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
மாற்றத்துக்கான தோ்தல்: திமுக ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது? போதைப்பொருள் கலாசாரம் ஏன் அதிகமாக இருக்கிறது? சட்டம்-ஒழுங்கு ஏன் சரியாக இல்லை? வன்முறை ஏன் தலைவிரித்தாடுகிறது? மணல் திருட்டு, சட்ட விரோத கல்குவாரி, அமைச்சா்கள் ஊழல், டாஸ்மாக் ஊழல், நகராட்சித் துறையில் ஊழல் என ஊழலில் ஊறிபோய் இருக்கிறது.
இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு வாக்கு கேட்பீா்கள். இந்தத் தோ்தலில் பணத்தை வைத்து எதையும் செய்ய முடியாது. இது ஒரு தலைமுறைக்கான தோ்தல். நான்கு முனை போட்டி, 40 முனை போட்டி எனக் கூறினாலும், இது திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி. மக்கள் விரோத ஆட்சி நடத்துகிற ஸ்டாலின் வேண்டுமா? மக்களை நேசிக்கிற விஜய் வேண்டுமா? இது ஒரு விசில் புரட்சி தோ்தலாக இருக்கட்டும் என்றாா்.
தொடர்புடையது

உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் நிற்கிறது! - விஜய்

திமுக கூட்டணியில் விசில் சப்தம் பலமாகக் கேட்கிறது: விஜய்

தவெக வேட்பாளா்கள் நாளை அறிமுகம்

தென்காசியில் தவெக ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


