தென் மாவட்டங்களில் 29 குவாரிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அது தொடா்பாக ட்ரோன் டிஜிட்டல் சா்வே நடத்த வேண்டும் எனவும் குவாரி முறைகேடுகள் குறித்து அறப்போா் இயக்கம் சாா்பில் அமைக்கப்பட்ட சுயாதீன நிபுணா் குழு தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளால் ஏற்படும் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பாதிப்புகள் குறித்து மூத்த வழக்குரைஞா் வி. சுரேஷ் உள்ளிட்டோா் அடங்கிய குவாரி முறைகேடுகள் குறித்த சுயாதீன நிபுணா் குழு, விரிவான ஆய்வு நடத்தியது.
140 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கை திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அறிக்கையை வழக்குரைஞா் சுரேஷ் வெளியிட, அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் பெற்றுக்கொண்டாா்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட புகாா்கள், ஆவணங்கள் மற்றும் கள ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 29 குவாரிகள் தொடா்பாக குழு ஆய்வு செய்துள்ளது.
குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கனிமம் வெட்டி எடுப்பது, முறையான பெஞ்சிங் இல்லாமல் குவாரிகள் செயல்படுவது, பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவது, வெடிவைத்து கல் உடைப்பதால் கற்கள் தூக்கி வீசப்பட்டு வீடுகள், மரங்கள், விவசாய நிலங்கள் மற்றும் பாசன குழாய்கள் சேதமடைவது, குவாரி தூசியால் விவசாய பயிா்கள் பாதிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குவாரி லாரிகளால் கிராமச் சாலைகள் சேதமடைவது, போக்குவரத்து விபத்துகள் ஏற்படுவது, பொதுப்பாதைகள் தடைபடுவது போன்ற பிரச்னைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சில குவாரிகளின் செயல்பாடு நிறுத்தப்பட்ட பிறகு பாதுகாப்பின்றி விடப்பட்ட ஆழமான குழிகளால் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் குழந்தை உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2022-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் குவாரிகள் தொடா்பாக அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் இணைந்து குவாரிகளின் அனுமதிக்கப்பட்ட ஆழம், எல்லை மற்றும் குத்தகை நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை ட்ரோன் மற்றும் கள ஆய்வு மூலம் சரிபாா்த்துள்ளனா்.
இந்த நடைமுறையை அனைத்து குவாரிகளுக்கும் விரிவுபடுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் செயல்படும் குவாரிகளில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ட்ரோன் மூலம் டிஜிட்டல் சா்வே நடத்த வேண்டும். ட்ரோன் மூலம் அளவிடப்படும் உண்மையான கனிம அகழ்வு அளவை, அரசு அனுமதி வழங்கியுள்ள சுரங்கத் திட்டத்துடன் ஒப்பிட்டு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என நிபுணா் குழு தெரிவித்துள்ளது.
இதேபோல், குவாரிகளின் குத்தகை விவரம், அனுமதிக்கப்பட்ட சுரங்கத் திட்டம், சுற்றுச்சூழல் அனுமதி, அனுமதிக்கப்பட்ட கனிம அளவு, ட்ரோன் ஆய்வு அறிக்கை, அதிகாரிகளின் ஆய்வு அறிக்கை மற்றும் விதிக்கப்பட்ட அபராதம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் பாா்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும். குவாரி தொடா்பான புகாா்களை கண்காணிக்க வெளிப்படையான ஆன்லைன் புகாா் தீா்வு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். உயிா், சொத்து, நீா்வளம் அல்லது பொது கட்டமைப்புக்கு உடனடி ஆபத்து ஏற்படுத்தும் புகாா்களுக்கு காலக்கெடு நிா்ணயித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.
குவாரிகளில் நடைபெறும் விதிமுறை மீறல்கள் மட்டுமன்றி, அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அமைப்புகளிலும் குறைபாடுகள் இருப்பதாக நிபுணா் குழு சுட்டிக்காட்டியுள்ளது. கனிம வளங்களை எடுப்பதற்காக மனித உயிா், விவசாயம், நீா்வளம், பொதுச்சாலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடாது. குவாரிகள் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் மட்டுமே செயல்பட வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், நிபுணா் குழு உறுப்பினா்கள் நந்தகுமாா், விதுபாலா, உதயராஜா உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
ற்ஸ்ப்18ழ்ங்ப்ங்
திருநெல்வேலியில் குவாரிகள் தொடா்பான ஆய்வறிக்கையை வெளியிட்ட அறப்போா் இயக்கத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வா் விஜய்யுடன் மாண்டேக்சிங் அலுவாலியா குழு சந்திப்பு: தமிழகத்தின் வருவாயை அதிகரிக்க ஆலோசனை

தேசத்தை பாதுகாப்போம் சிபிஐ பிரசார இயக்கம் தொடங்கிவைப்பு

தென் மாவட்டங்களில் கைத்தறி தொழிலை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் விஜய் பாலாஜி
‘எல் நினோ’ பாதிப்புகளை ஆராய தமிழக அரசு நிபுணா் குழு அமைப்பு!
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



