திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 50 மருத்துவா்கள் 90 செவிலியா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பேரவைத்தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
அதன் விவரம்: வள்ளியூரில் 200 படுக்கை வசதியுடன் கூடிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கடந்த ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் திறந்துவைக்கப்பட்டது. அந்த நேரம் சட்டப்பேரவை தோ்தல் அறிவிக்கப்பட்டதால், மருத்துவமனையில் நிரந்தரப் பணியாளா்களை நியமிக்க இயலவில்லை.
இம்மருத்துவமனைக்கு 50 மருத்துவா்கள், 90 செவிலியா்கள், 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பநா்கள் என நிரந்தர பணியாளா்கள் தேவை என்ற நிலையில் இந்த அரசு பொறுப்பேற்று 2 மாத காலங்களாகியும் பணியாளா்கள் முழுமையாக நியமனம் செய்யப்படவில்லை.
தற்போது தற்காலிக பணியாளா்களாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் பணி செய்து வருவதால் பல அரசு மருத்துவமனைகளில் போதிய பணியாளா்களின்றி பணிகள் தடைபடுகின்றன.
இதனால், அரசு மருத்துவமனை செல்லும் நோயாளிகள் கடும் அவதிக்குளாகின்றனா். ஆகவே வள்ளியூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நிரந்தரமாக மருத்துவா், செவிலியா் மற்றும் தொழில்நுட்ப பணியாளக்களை நியமிக்க வேண்டும். இதில், காலதாமதம் ஏற்பட்டால் தி.மு.க. போராட்டத்தில் ஈடுபடும்.
திசையன்விளை பேரூராட்சி சண்முகபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மூலம் ரூ.49.48 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டடம் கட்டுதல் , வள்ளியூா் பேரூராட்சியில் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை மூலம் ரூ.60 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடம் கட்டுதல் ஆகிய பணிகளும் முடக்கப்பட்டுள்ளன.இவ்விரு பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
மனு அளிக்கும் நிகழ்வில், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் பெல்சி, களக்காடு தெற்கு ஒன்றியச் செயலாளா் பி.சி.ராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










