இசை மேதை விளாத்திகுளம் நல்லப்பசாமிக்கு மணி மண்டபம் அமைக்கப்படுமா?

தமிழ் மற்றும் கர்நாடக சங்கீதத்தில் இசை மேதையாக திகழ்ந்த விளாத்திகுளம் நல்லப்பசாமியின் நினைவை போற்றும் விதத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  
Updated on
2 min read

தமிழ் மற்றும் கர்நாடக சங்கீதத்தில் இசை மேதையாக திகழ்ந்த விளாத்திகுளம் நல்லப்பசாமியின் நினைவை போற்றும் விதத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி ஜமீன் பரம்பரையில் 1889ஆல் பிறந்து 1965 வரை 75 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் மற்றும் கர்நாடக சங்கீதத்துக்கு மாபெரும் இசைத் தொண்டாற்றியவர் விளாத்திகுளம் சாமிகள் என போற்றப்பட்ட நல்லப்பசாமி பாண்டியன்.  இவர் கர்நாடக இசையை முறைப்படி கற்றுகொள்ள வேண்டிய தேவையின்றி இயல்பாகவே வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டிருந்தார். மைசூர் மகாராஜா நடத்திய சங்கீத விழாவில் தொடர்ந்து 6 நாள்கள் இடைவிடாமல் கரஹரப்ரியா ராகத்தில் ஆலாபனை செய்து பெரும்புகழ் பெற்றார். இவரது இந்த சாதனைகள் இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. திரைப்பட நடிகர் தியாகராஜ பாகவதர், நடிகை கே.பி. சுந்தராம்பாள், நாகஸ்வர சக்கரவர்த்தி காருகுறிச்சி அருணாசலம் பிள்ளை உள்ளிட்டோர் நல்லப்பசாமியை தங்கள் குருவாகவே ஏற்றுக்கொண்டனர்.
விளாத்திகுளம் வட்டாரத்தில்  நாடக கலைஞர்கள் இன்றும் நல்லப்பசாமியை போற்றி பாடித்தான் நாடகங்களை தொடங்குகின்றனர்.  இவரை அறிந்த சங்கீத வித்வான்கள் அனைவரும்,  ஒப்புயர்வில்லாத இசை மகா சமுத்திரம் என்று கூறுகிறார்கள்.  நல்லப்பசாமியின் இசை பிரவாகத்தை தனது எழுத்துகள், மேடை சொற்பொழிவுகள் மூலமாக ஆங்காங்கே பதிவு செய்து தமிழ் உலகத்துக்கு வெளிப்படுத்தி வருபவர்கள் எழுத்தாளர்கள் இடைசெவல் கி. ராஜநாராயணன், விளாத்திகுளம் பா. ஜெயப்பிரகாசம், எட்டயபுரம் இளசை மணியன் உள்ளிட்ட பலர்.
  அரசியல் தலைவர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள், கலைஞர்களை கௌரவித்து மணிமண்டபமும் கட்டி பெருமைப்படுத்தும் தமிழக அரசு, விளாத்திகுளத்தில் தோன்றி இசை உலகில் முடிசூடா மன்னராக  வாழ்ந்து மறைந்த நல்லப்பசாமிக்கு நினைவு மணிமண்டபம் அமைப்பதற்கும், இசைப்பள்ளி அமைத்து ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடத்தவும் நடப்பு சட்டப்பேரவை  கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விளாத்திகுளம் தொகுதி மக்களிடம் மட்டுமல்லாது இசை ஆர்வலர்களிடமும் ஏற்பட்டுள்ளது.
  இதுகுறித்து எழுத்தாளர் இளசை மணியன் கூறியது:  ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்ட பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு நாயக்கரின் வீர மரபை சேர்ந்தவர் விளாத்திகுளம் சாமி.   மகாகவி பாரதியாரின் நண்பரும்கூட.  விளாத்திகுளம் சாமியை போல ராக ஆலாபனம் செய்வது அபூர்வம் என்று வித்வான்களிடையே அன்றும் இன்றும் பேச்சு உண்டு.    எப்படிப்பட்ட அபூர்வ ராகத்தையும் மணிக்கணக்கில் யாதொரு சிரமமும் இன்றி சுலபமாக கையாளக்கூடியவர்.    இவருடைய திறமையை தமிழ் உலகம் நன்கு அறியவில்லை.  நன்கு பயன்படுத்தவும் இல்லை.
1990ஆம் ஆண்டில் நல்லப்பசாமியின் நூற்றாண்டு விழா, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆறுமுகம்  தலைமை வகித்து நல்லப்பசாமிக்கு புகழஞ்சலி செலுத்தி அவரது இசை ஞானத்தை போற்றி கௌரவித்தார்.
 அன்றைய தினம் விழாக் குழுவினர், நல்லப்பசாமி சமாதி அமைந்துள்ள வளாகத்தில்  நினைவு மணிமண்டபம் அமைக்கவும், அவரது நினைவாக விளாத்திகுளத்தில் இசைப் பள்ளி அமைத்து ஆண்டுதோறும் அரசின் சார்பில் தொடர் இசை விழா நடத்தவும் அரசு ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.  அதன் பின்னர் பல முறை அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
  இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இசைக் கலைஞர்களிடையே எழுந்துள்ளது என்றார் அவர்.
  எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசம் கூறியது:   தெய்வ பக்தியோடு தேச பக்தியையும் வளர்த்தெடுத்த பாங்கு என கவி உலகில் இசை வெள்ளமாய் பாய்ந்த அமுத அருவி விளாத்திகுளம் நல்லப்பசாமி.   அவரைப் போற்றும் விதமாக முதலில் அரசின் சார்பில் விளாத்திகுளத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.  அதில் தொடர் இசை ஆராதனை விழா நடத்த வேண்டும். கலைத்துறையை சார்ந்தவர்களையும், இசை மேதைகளையும் வரவழைத்து கலை விழா நடத்தவும் ஆவன செய்ய வேண்டும் என்றார் அவர்.
 நல்லப்பசாமியின் நினைவாக விளாத்திகுளத்தில் 1974 ஆல் கட்டப்பட்ட கலையரங்கம் முற்றிலும் தரைமட்டமாகி கல்வெட்டு மட்டும் மிச்சமாக உள்ளது. நல்லப்பசாமி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திண்டுக்கல் அங்குவிலாஸ் முத்தையா மாரியம்மாள் குடும்பத்தினர்  சிவலிங்க வடிவத்தில் சமாதி அமைத்துத் தந்துள்ளனர்.  அந்த சமாதியில்  தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
  அங்கு மண்டபம் எழுப்பி தொடர் இசை நிகழ்வுகள் நடத்தி அவரது பெருமைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதே இசை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com