ஜம்மு காஷ்மீரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் புதன்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி கோட்ட பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தின்போது, பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் பிஎஸ்என்எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறுமிக்கு அஞ்சலி செலுத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், மாவட்டச் செயலர் கா.மை. அகமது இக்பால் தலைமையில், சிறுமி கொலையை கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகியன சார்பில், போல்டன்புரத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாதர் சங்க மாவட்டச் செயலர் தனலட்சுமி தலைமை வகித்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் அழகுமுத்து பாண்டியன் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி: ஜம்மு-காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு, கோவில்பட்டியில் மாதர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
புதுக்கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்டத் தலைவர் சரோஜா தலைமை வகித்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் பரமராஜ், பொருளாளர் ராஜு, நகரத் துணைச் செயலர் முனியசாமி, மாதர் சங்க நகரச் செயலர் கோமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







