கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தூய்மை பாரத நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தலைமை வகித்தார். தூய்மை பிரசார வாகனத்தை தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கிவைத்தார்.
முன்னதாக, கிராம தூய்மைப் பணியை ஆட்சியர் தலைமையில் அமைச்சர் தொடங்கிவைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், அமைச்சர் பேசியது: திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக நமது மாவட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தங்கள் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாம்களில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும்.
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் தூய்மை குறித்து அவர்களது நண்பர்கள், உற்றார் உறவினர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். முன்னதாக, பேரவை உறுப்பினர் அலுவலகம் முன் மரக்கன்றுகளை அமைச்சர் நட்டார்.
தொடர்ந்து, ஜீவ அனுகிரகா பொதுநல அறக்கட்டளை சார்பில் நகராட்சிப் பகுதிகளில் சாலையோரம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் விடுவதற்கான வாகனத்தை அமைச்சர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், கோவில்பட்டி கோட்டாட்சியர் (பொ) செழியன், தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணை இயக்குநர் ரேவதி, வட்டாட்சியர் பரமசிவன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், அதிமுக நிர்வாகிகள் விஜயபாண்டியன், அய்யாத்துரைப்பாண்டியன், வேலுமணி, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகானந்தம் நன்றி கூறினார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது: அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி பிரச்னை தொடர்பாக, ஆளுநர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரை அழைத்து சம்பவத்தின் தன்மை பற்றி கருத்து கேட்டிருக்கிறார். உயர்கல்வித் துறை அமைச்சரும் துறை ரீதியாக ஒரு குழு அமைத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அதிகாரம் மத்திய அரசின் பசுமை தீர்ப்பாயம் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசின் பசுமை தீர்ப்பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் ஆணை வாங்கியிருக்கிறார்கள். அந்த வழிமுறைகளை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். மக்களை பாதிக்கின்ற விஷயத்தில் அரசு நிச்சயமாக வேடிக்கை பார்க்காது.
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








