சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க. பாலமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க. பாலமுருகன் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் முத்து, ஜோசப் பூபாலராயர், உதவி ஆய்வாளர்கள் ஜெனட், விசுவநாதன், பாலகணேசன் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது.
தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, தேசிய விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். அல்லது பணிபுரியும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ, ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்போ வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளை சில நிறுவனங்கள் கடைப்பிடிக்காதது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, விடுமுறை நாளன்று விதிமுறையை மீறி தொழிலாளர்களை பணியமர்த்தியதற்காக 39 நிறுவனங்கள், தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான முறையான படிவத்தை வெளியிடாத 17 நிறுவனங்கள் , 9 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 65 நிறுவனங்கள் மீது உரிய நோட்டீஸ் வழங்கி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.