
பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் பரிசுக் கூப்பன் தரும் இயந்திரம்: தூத்துக்குடியில் அறிமுகம்
பிளாஸ்டிக் பாட்டிலை உள்ளே செலுத்தினால் பரிசுக் கூப்பனை தரும் வகையில், தூத்துக்குடியில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் என்ற நவீன இயந்திரம் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
பிளாஸ்டிக் பாட்டிலை உள்ளே செலுத்தினால் பரிசுக் கூப்பனை தரும் வகையில், தூத்துக்குடியில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் என்ற நவீன இயந்திரம் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்குமாறு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலை தெருவோரங்களில் வீசாமல் அதை சேகரித்து வைத்து ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் என்ற நவீன இயந்திரத்தில் செலுத்தினால் பரிசுக் கூப்பன் கிடைக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக தூத்துக்குடியில் இந்த நவீன இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவன பங்களிப்புடன் முத்துநகர் கடற்கரையில் நவீன இயந்திரத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை சேகரித்து வைத்து ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரத்தில் போட்டால் அவை உள்ளேயே நொறுக்கப்பட்டு சேமிக்கப்படும். மேலும், பாட்டில்களை போடுபவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களில் தள்ளுபடி பரிசு கூப்பன்களை இயந்திரம் வழங்கும்.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை இந்த இயந்திரத்தில் போட்டு கூப்பன்களை பெற்றுக் கொள்ளலாம். சூப்பர் மார்க்கெட், ஹோட்டல் என 7 நிறுவனங்கள் தள்ளுபடி கூப்பன் வழங்கும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் மற்றொரு மெஷின் வைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து கூடுதல் இயந்திரங்கள் அமைக்கப்படும் என்றார் அவர்.
துப்புரவுத் தொழிலாளர்கள் தகவல் சேகரிப்பு: தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், நியூ விங்கிஸ் என்ற திட்டத்தை ஆட்சியர் தொடங்கிவைத்தார்.
துப்புரவுத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பேணும் வகையில் பல்வேறு உபகரணங்களை பயன்படுத்துவது, துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் மீண்டும் இதே பணிக்கு வராமல் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கம். மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து துப்புரவுத் தொழிலாளர் குடும்பங்களும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
கிராம சபைக் கூட்டம்: ஓட்டப்பிடாரம் வட்டம், குறுக்குசாலை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு 26 பயனாளிகளுக்கு ரூ. 28.14 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




