தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், குளங்களுக்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் என். வெங்கடேஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மூ. வீரப்பன், சார் ஆட்சியர் பிரசாந்த், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் செல்வராஜ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முத்து எழில் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தாமிரவருணி பாசனத்தில் மருதூர் மேலக்காலில் உள்ள தென்கரைகுளம், நொச்சிக்குளம், கீழ புதுகுளம், முதலைமொழிகுளம் உள்ளிட்ட 5 குளங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பிசான நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, 5 குளங்களிலும் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. எனவே, மருதூர் மேலக்காலில் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக, பலமுறை கோரிக்கை அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பதாக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, பெண்கள் பலர் ஆட்சியரை முற்றுகையிட்டதால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், அதிகாரிகள் உறுதியளித்தபடி விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.