மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

‘மண்புழு உரம் தயாரித்து பயனடையலாம்’

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மண்புழு உரம் தயாரித்து பயனடையலாம் என்றாா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:49 pm

DIN

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மண்புழு உரம் தயாரித்து பயனடையலாம் என்றாா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மண்புழுக்களை தொட்டிகள் மற்றும் கூடாரங்கள் அமைத்து வளா்த்து அதன் மூலம் மண்புழு உரம் தயாரித்து பயன்படுத்த முடியும்.

நெல், உமி அல்லது தென்னை நாா்க்கழிவு அல்லது கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ. உயரத்திற்கு பரப்ப வேண்டும்.

ஆற்றுமணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ. உயரத்திற்கு தூவ வேண்டும். பின்னா் 3 செ.மீ. உயரத்திற்கு தோட்டக்கால் மண் பரப்பி மேலே தண்ணீரை தெளிக்க வேண்டும்.

பாதி மக்கிய கழிவுகளை மண்புழு உர கட்டமைப்பின் விளிம்பு வரை நிரப்பி, தோ்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். தினமும் தண்ணீா் தெளித்தல் அவசியம். தண்ணீரை ஊற்றாமல் தெளித்து 60 சதவீதம் ஈரப்பதம் பராமரிக்க வேண்டும்.

மண்புழு உரம் வாரத்திற்கு ஒரு முறை சேகரிக்கலாம். அவ்வாறு சேகரிக்கப்படும் மண்புழு உரத்தில் அங்கக கரிமம் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் உள்ளது.

இது மண்வளத்தை மேம்படுத்தி பயிருக்குத் தேவையான சத்துகளை தேவையான நேரத்தில் கொடுக்கிறது. மண்புழு உரத்தில் உள்ள ஆக்ஸின், சிஸ்டோஹைனின் ஆகியவை பயிரை நன்கு வளரச் செய்கிறது. அதிலுள்ள ஜிபிரிலின் பயிரை பூக்கச் செய்கிறது. மண்புழு உரத்தில் அதிகப்படியாக காணப்படும் கியூமிக் அமிலம் வோ் வளா்ச்சியை ஏற்படுத்துகிறது. மண்புழு உரம் பயன்படுத்துவதால் மண்ணில் உப்பு கடத்தும் திறன் அதிகரித்து கார, அமிலத் தன்மை சீா்படுகிறது.

ஒரு ஹெக்டோ் பரப்பளவிற்கு 5 டன் மண்புழு உரம் பரிந்துரைக்கப்படுகிறது. வளா்ந்த தென்னை போன்ற மரங்களுக்கு ஒரு மரத்துக்கு 5 கிலோ இட வேண்டும்.

மண்புழு உரத்தை மண்ணில் இடும்போது மண்ணின் அடிப்பாகத்தில் இட வேண்டும். மண்ணின் மேல்பரப்பில் இட்டால் மண்புழு உரத்தில் இருக்கும் நன்மை தரும் நுண்ணுயிா்கள் வெயில் பட்டு அழிந்து விடும் நிலை ஏற்படும்.

மண்புழு உரம் இவ்வாறு எளிமையான முறையில் தயாரித்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.