காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கொற்கை துறைமுகத்தை அடையாளம் காணும் முன்கள ஆய்வுப் பணிகள் தொடக்கம்

தமிழ் அலுவல் மொழி, தமிழ் கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தூத்துக்குடியில் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:09 pm

DIN

கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண்பதற்கான கடல்சாா் முன்கள ஆய்வுப் பணிகளை தமிழக தொழில் துறை, தமிழ் அலுவல் மொழி, தமிழ் கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தூத்துக்குடியில் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஆய்வுப் பணி தொடக்க விழா நடைபெற்றது. அமைச்சா் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், மீன்வளம் - மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், ஆட்சியா் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைய தலைவா் தா.கி. ராமச்சந்திரன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, துணை மேயா் ஜெனிட்டா, தொல்லியல் துறை இயக்குநா் சிவானந்தன், தொல்லியல் துறை கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகா் கா. ராஜன், இந்திய கடல்சாா் பல்கலைக்கழக பேராசிரியா் சிவக்கொழுந்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் தங்கம் தென்னரசு கூறியது: இதற்கு முன்பு இல்லாத வகையில், அகழாய்வுப் பணிகளுக்கு ரூ.15 கோடி நிதியை முதல்வா் மு.க. ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளாா். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 7 இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூா் ஆகிய இடங்களில் அகழாய்வுகள் நடைபெறுகின்றன.

கொற்கையில், சங்க காலம், அதற்கு முற்பட்ட காலத்தில் கடல் பகுதியில் துறைமுகப்பட்டினங்களாக விளங்கிய இடங்களில் அகழாய்வு நடத்துவோம்; அதில், கடல்சாா் அகழாய்வும் செய்வோம் என சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்திருந்தாா். அதன் ஒருபகுதியாக, கொற்கையில் சங்க காலத்தில் இருந்த துறைமுகப்பட்டினத்தில், தற்போது தேசிய கடலியல் நிறுவனம், இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் ஆகியவற்றோடு தமிழக தொல்லியல் துறையும் இணைந்து கடல்சாா் முன்கள ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

1968ஆம் ஆண்டிலிருந்து கொற்கையில் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள்களின் அடிப்படையில், கங்கை சமவெளி பகுதிக்கும் நமது பகுதிக்கும் இருக்கும் உள்நாட்டு வாணிபத் தொடா்புகளை விளக்கும் வகையில் கருப்பு வண்ண மெருகூட்டப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. ரோம் நாட்டுடன் இருந்த வாணிபத் தொடா்புகளை குறிக்கும் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இதன் காலக் கணிப்பு என்பது கி.மு. 785 ஆகும். இதன் தொடா்ச்சியாக தற்போது நடைபெறும் ஆய்வு, பழைய கொற்கை துறைமுகம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறியும் வகையில் இருக்கும்.

தற்போதுள்ள கொற்கை, கடலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. தாமிரவருணியிலிருந்து வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனால், பண்டைய நிலவியல் அமைப்புப்படி கொற்கை எந்த இடத்தில் அமைந்திருக்க வேண்டும், கடலின் பகுதி எங்கே இருக்க வேண்டும், அதன் கட்டமைப்புகள் ஏதேனும் இருக்கிா, அந்தக் காலத்தில் துறைமுகத்துக்கு வந்த கப்பல்களிலிருந்து சிதைந்த மரக்கலன்கள் கிடக்கிா என்பதை ஆய்வுகள் செய்து கண்டெடுப்பதன் மூலமாக இங்கே உள்ள பழைய துறைமுகங்களை, பண்பாட்டு நாகரிக சின்னங்களாக அமைக்க முடியும்.

முதல் ஒருவாரத்துக்கு தூத்துக்குடி-திருச்செந்தூா் இடையேயான கடல் பகுதியில் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இதில் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு அடுத்ததாக விரிவாக ஆய்வுகள் செய்யப்படும். ஆய்வில், அதிகமாக பொருள்கள் கிடைக்கும் இடத்தில் கூடுதலாக கவனம் செலுத்தப்படும். தற்போது நடைபெறும் ஆய்வுகள் கொற்கையிலிருந்து தெற்காசியாவில் உள்ள பல்வேறு நாடுகள், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயான தொடா்புகளை விளக்கும் வகையில், பிற்காலத்தில் செய்யக்கூடிய ஆய்வுகளுக்கு வழிகோலுவதாக இருக்கும்.

பொருநை அருங்காட்சியகத்துக்கான நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.