கோவில்பட்டியில் பாஜகவினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd August 2022 02:41 PM | Last Updated : 02nd August 2022 02:41 PM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், காவல் துறையினர் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமையில், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் அருகே இருந்து, பாஜகவினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
இந்நிலையில், அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், பாஜகவினர் நடத்திய ஊர்வலத்தை கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபு தலைமையில், துணை கண்காணிப்பாளர்கள் வெங்கடேஷ், லோகேஸ்வரன் மற்றும் காவல் துறையினர் அவர்களை தடுத்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் காவல்துறையினருக்கும், பாஜக கட்சியினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு மற்றும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினர்.
இதையடுத்து, கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே, பாஜகவை சேர்ந்த மேலும் சிலர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அப்போதும் பாஜக கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதையடுத்து, கோவில்பட்டி எட்டையபுரம் சாலை தபால் அலுவலகம் மற்றும் புதுரோடு அரசு மருத்துவமனை அருகே சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க: தீமிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் விழுந்து படுகாயமடைந்த பக்தர்கள்
மேலும், பாஜகவினர் நகரில் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதற்காக, நகரின் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.