கோவில்பட்டி: அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 25th July 2022 01:34 PM | Last Updated : 25th July 2022 01:34 PM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு மின் கட்டண உயர்வைக் கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், அதிமுக அமைப்பு செயலருமான கடம்பூர் செ.ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து முழக்கமிட்டனர். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சீனி ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, நகரச் செயலர் விஜய பாண்டியன், வடக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் முருகேஸ்வரி, வழக்குரைஞர் அணி செயலாளர் சிவபெருமாள், ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் வேலுமணி உள்பட ஒன்றிய பேரூர் செயலர்கள் நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரிக்கன் விளக்கை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனர். முன்னதாக தலையால் நடந்தான் குளம், கோவில்பட்டி பாரதி நகர் உள்ளிட்ட பிற பகுதிகளைச் சேர்ந்த பிற கட்சியினர் அதிமுகவில் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் இணைந்தனர்.