

வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, 8 நாள்களுக்குப் பிறகு தூத்துக்குடி மீனவர்கள் இன்று வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
தூத்துக்குடியில் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 250 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றன. இதில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்களிடம் உள்ள பங்கில், 10 சதவீதம் பெற்றுக்கொள்கின்றனர். இதனை ஆறு சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீன்பிடித் தொழிலாளர்கள் கடந்த 6ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வந்தனர்.
இதையடுத்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் கடந்த 11ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்களுக்கு இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இப்பிரச்னைக்கு தீர்வு காண மீன்வளத்துறை இணை இயக்குனர், காவல் துறை அதிகாரிகள் வட்டாட்சியர், விசைப்படகு உரிமையாளர்கள், விசைப்படகு தொழிலாளர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததையடுத்து, மீனவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
மேலும், திங்கள்கிழமை முதல் மீன்பிடிக்கச் செல்வதாக மீனவர்கள் தெரிவித்தனர். அதன்படி, இன்று அதிகாலை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக, மீன்பிடி துறைமுகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணயில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.