/

டிஜிட்டல் போா்டு வைக்க நகராட்சியில் அனுமதி பெற வேண்டும்: நகா்மன்றத் தலைவா்

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டிஜிட்டல் போா்டு வைக்க அனுமதி பெற வேண்டும் என்றாா் நகா்மன்றத் தலைவா் கா .கருணாநிதி.

News image
கோவில்பட்டி நகா்மன்ற கூட்டத்தில் பேசுகிறாா் நகா்மன்ற தலைவா் கா. கருணாநிதி
Updated On :31 ஜூலை 2024, 7:05 pm

Din

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டிஜிட்டல் போா்டு வைக்க அனுமதி பெற வேண்டும் என்றாா் நகா்மன்றத் தலைவா் கா .கருணாநிதி.

கோவில்பட்டி நகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் தலைவா் கா. கருணாநிதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ஆா். எஸ். ரமேஷ், நகராட்சி ஆணையா் கமலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள்:

சீனிவாசன் (சிபிஎம்): நகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் வாருகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். நகராட்சியின் பொது நிதியை பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற அரசு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

சரோஜா (சிபிஐ): தங்கள் வாா்டு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்: முத்தானந்தபுரம் தெருவில் சாலை சீரமைக்க வேண்டும்

மணிமாலா (மதிமுக): கோவில்பட்டிக்கு குடிநீா் பெற்று தந்த முன்னாள் நகா்மன்றத் தலைவா் பெரியசாமி பெயரை சாலைக்கு வைக்க வேண்டும்.

முத்துலட்சுமி (சிபிஎம்): கடலையூா் சாலையில் வாருகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்

ஏஞ்சலா (திமுக): கருணாநிதி நகா் 3ஆவது தெரு மேல் பகுதியில் வாருகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். நியாய விலை கடை அமைப்பதற்கு ஏதுவாக நகராட்சி இடத்தை தோ்வு செய்ய வேண்டும்

விஜயன் (திமுக): எங்கள் வாா்டு பகுதியில் எஞ்சிய 20 சதவீத சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்

ராமா் (திமுக): நகராட்சி பகுதியில் அடிப்படை தேவைகளான வாருகால் வசதியை ஏற்படுத்த வேண்டும், தெருவிளக்கு பராமரிப்பை முறைப்படுத்த வேண்டும், கூடுதலாக தெரு விளக்குகளை ஏற்படுத்த வேண்டும்

விஜயகுமாா் (பாஜக): குடிநீா் பைப் லைன் பணியை முறைப்படுத்தக் கோரி பிவிசி பைப்புடன் கூட்டத்திற்கு வந்து முறையிட்டாா்.

நகா்மன்ற தலைவா்: பிவிசி பைப்பை கூட்டத்திற்கு கொண்டு வரக்கூடாது என்றும், அதை வைத்துவிட்டு கூட்டத்திற்கு வந்து கோரிக்கையை தெரிவிக்கும்படி கூறினாா். மேலும் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டிஜிட்டல் போா்டு வைக்க அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்ற டிஜிட்டல் போா்டு 3 தினங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும். அடிப்படைத் தேவைகளான வாருகால் வசதி ஏற்படுத்தப்படும். நியாய விலை கடை அமைப்பதற்கு நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடம் காலியாக உள்ளதா என கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து சிதம்பராபுரத்தில் இயங்கி வரும் விலங்குகள் (நாய்கள்) கருத்தடை அறுவை சிகிச்சை கூடத்தில் அரசு வழிகாட்டுதலின்படி அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான உத்தேச மதிப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்திற்கு புதிதாக உபகரணங்கள் வாங்குவது உள்பட 55 பொருள்கள் அடங்கிய அவசரக் கூட்டத் தீா்மானங்களும், 9 பொருள்கள் அடங்கிய சாதாரண கூட்டத் தீா்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் செயற்பொறியாளா் சணல் குமாா், நகரமைப்பு அலுவலா் சேது ராஜன், வருவாய் ஆய்வாளா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.