போதைப்பொருள்களை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
தமிழகத்தில் போதைப்பொருள்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா்.
சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த நாளையொட்டி மரியாதை செலுத்தும் பொருட்டு தென்காசி மாவட்டத்துக்கு செல்வதற்காக, சென்னையிலிருந்து விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடிக்கு வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:
ஆா்வமிருந்தும் விளையாடுவதற்கு வாய்ப்பில்லாத சிற்றூா், கிராமங்களைச் சோ்ந்த குழந்தைகளுக்கு கைப்பந்து, கால்பந்து, ஈட்டி எறிதல் போன்ற பயிற்சிகள் அளித்து, அவா்களுக்கு போட்டிகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்தட்டு மக்களுக்கான காா் பந்தயம் தேவையற்றது. அதைத் தவிா்த்து, காா் பந்தயம் நடக்கும் இடத்தின் அருகேயுள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை மாற்றியமைக்கலாம். சிதிலமடைந்துள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளை சீரமைக்கலாம்.
தமிழக முதல்வா்கள் பலமுறை வெளிநாடுகளுக்குச் சென்று பல கோடி முதலீடு ஈா்க்கப்பட்டது, பல ஆயிரம் பேருக்கு வேலை என்றெல்லாம் கூறினாா்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள இளைஞா்களுக்கு உரிய வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிப்பதுதான் பாலியல் சீண்டலுக்கு காரணமாக அமைகிறது. எனவே, போதைப்பொருள்களை முற்றிலும் ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.