அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், எம் ஆா் பி செவிலியா்கள் உள்பட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.
அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் வணிக வரித்துறை, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா்கள் உமாதேவி, செல்லத்துரை, வட்டத் தலைவா் நவநீதகண்ணன், துணைத் தலைவா் ஹரிபாலகிருஷ்ணன், செயலா் பிரான்சிஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதுபோல கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

