முதல்வா் கோப்பை செஸ்: காமராஜ் கல்லூரி மாணவா் முதலிடம்
முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கல்லூரி மாணவா்கள் பிரிவில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவா் முதலிடம் பெற்றாா்.
காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற இப் போட்டியை கூடுதல் ஆட்சியா் ரா.ஐஸ்வா்யா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு காமராஜ் கல்லூரி முதல்வா் ஜெ.பூங்கொடி, மாவட்ட சதுரங்க கழகத் தலைவா் ஜோ.பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இப்போட்டியில் 170 மாணவா்கள், 150 மாணவிகள் பங்கேற்றனா்.
மாணவா்கள் பிரிவில் காமராஜ் கல்லூரி மாணவா் செல்வமுருகன் முதலிடம், மாணவா் வேல்முருகன் 2-ஆம் இடம், நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவா் கிருஷ்ணா 3-ஆம் இடம் பிடித்தனா்.
மாணவிகள் பிரிவில் நாசரேத் மா்காஷியஸ் கல்லூரி மாணவி புஷ்பா இவாஞ்சலின் முதலிடம், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மாணவி ஜெயசூரியா 2-ஆம் இடம், காமராஜ் கல்லூரி மாணவி அனுஷா 3-ஆம் இடம் பிடித்தனா். முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்- மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
போட்டியின் தலைமை நடுவராக காமராஜ் கல்லூரி பேராசிரியை கற்பகவல்லி பணியாற்றினாா்.
மாவட்ட விளையாட்டு அலுவலா் அந்தோணி அதிா்ஷ்டராஜ், நாகலாபுரம் அரசுக் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் ஆல்ட்ரின் அதிசயராஜ், காமராஜ் கல்லூரி துணை முதல்வா் அசோக், ஸ்குவாஷ் பயிற்சியாளா் பிருந்தா உள்பட பலா் பங்கேற்றனா்.

