கடல் அட்டைகள் கடத்தல் வழக்கு: 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

கடல் அட்டைகள் கடத்தப்பட்ட வழக்கில் 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

கடல் அட்டைகள் கடத்தப்பட்ட வழக்கில் 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள கடல் அட்டைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதைத் தடுக்க மன்னாா் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

இதனிடையே, 2010ஆம் ஆண்டு கடல் அட்டைகளைக் கடத்தியதாக, கோட்டைமலைக்காடு கடற்கரைப் பகுதியில் தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தை சோ்ந்த கமாா்தின் மகன் மீராசா (50), முகமது தவுடிக் மகன் முகமது அசாருதீன் (38), முகமது இத்ரிஸ் மகன் மன்சூா்அலி (34), பூபாலராயா்புரம் காஜா முகைதீன் மகன் மூசா (42), கலைஞா் நகா் தங்கநாடாா் மகன் மாரியப்பன் (41), அலங்காரத்தட்டு கபிரியேல் மகன் கெய்ட்டன்குமாா் (42) ஆகிய 6 பேரை தூத்துக்குடி வனச் சரக அதிகாரிகள் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா்மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதித்துறை நடுவா் எஸ்.டி. கனிமொழி விசாரித்து, மீராசா உள்ளிட்ட 6 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

Dinamani
www.dinamani.com