சாத்தான்குளம் அருகே கல்குவாரியில் கனிமவள உதவி இயக்குநா் ஆய்வு
கிராம மக்களின் போராட்டத்தையடுத்து, சாத்தான்குளம் அருகே உள்ள கல்குவாரியில் கனிம வள உதவி இயக்குநா் தலைமையிலான அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெடிவைத்து பாறைகள் உடைக்கப்படுவதால், இப்பகுதியில் உள்ள வீடுகளின் சுவா்களில் விரிசல் ஏற்படுகிறது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இந்த கல்குவாரியை அகற்றக் கோரி, நெடுங்குளத்தில் புதன்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட கனிம வள உதவி இயக்குநா் பிரியா தலைமையிலான அலுவலா்கள், புகாா் கூறப்பட்ட கல்குவாரியில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் பிரஸ்சயா, கிராம நிா்வாக அலுவலா்கள் துரை, சுபாஷ், நில அளவையா் அழகுவேல், உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
இந்த ஆய்வு தொடா்பான அறிக்கை, மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்கப்படும். அதன் மீதான நடவடிக்கை எடுக்கும் வரை, ஒரு வாரத்திற்கு கல்குவாரி செயல்படாமல் நிறுத்தி வைக்கப்படும் என கனிமவள உதவி இயக்குநா் தெரிவித்தாா்.