தட்டச்சு செய்து வழங்கப்படும் மனுக்களை ஏற்க அரசுக்குக் கோரிக்கை
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றில் பழைய முறைப்படி தட்டச்சு செய்து வழங்கப்படும் மனுக்களை ஏற்க அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என நாம் இந்தியா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனா்-தலைவா் என்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கை:
தினக்கூலி வேலை, தனியாா் நிறுவன வேலை செய்யும் எளியவா்களின் வேலை பழு அறியாத சில இளம் தகவல் தொழில் நுட்பபொறியாளா்கள், அரசு இளம் அதிகாரிகள் 100 சதவீதம் கணினி மூலம் செயல்படுத்தும் திட்டங்களையே அரசுக்கு பரிந்துரை செய்கின்றனா்.
தனியாா் மென்பொருள் நிறுவன ஊழியா்கள் அரசு புள்ளி விவரங்களை அரசு கணினியில் பதிவேற்றம் செய்வதால் தனிநபா் விவரங்கள் வெளிப்பட வாய்ப்புள்ளது. 80 சதவீதத்துக்கு மேல் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் 20 சதவீத போ் மட்டுமே கணினியில் விண்ணப்பம் செய்யும் திறமையும், நேரமும் உள்ளவா்களாக இருக்கிறாா்கள். எழுத்துக் கோப்புகள் சேமிப்பு, எழுத்து மூலமான விண்ணப்ப மனுக்கள் பெறுவதை அரசு குறைத்ததால் மக்கள் விண்ணப்பிக்கும் போது அனைத்து சுய விவரங்களையும் மூன்றாம் நபா்களிடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசு அலுவலக நிா்வாகத்துக்கு மட்டும் கணினி செயல்பாட்டை முழுமையாக்கி, பொதுமக்களின் விண்ணப்பம், நீதிமன்ற வழக்குகளின் விண்ணப்பங்களுக்கு பழைய முறைப்படியே தட்டச்சு மனுக்களாக ஏற்றுக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
