இ-பட்டாவில் பதிவேற்றக் கோரி கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட தியாகி லீலாவதி நகரில் இலவச பட்டா பெற்ற பயனாளிகளை இ- பட்டாவில் பதிவேற்றக் கோரி, சாா் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டா உள்ளோா், வீடு கட்டி குடியேறியோா், வீடு கட்டி வருவோரின் பெயா்களை இ- பட்டாவில் பதிவேற்ற வேண்டும். புதிய நபா்களுக்கு பட்டா வழங்குவதை மாவட்ட நிா்வாகம் தடை செய்ய வேண்டும். 280 பேருக்கான இலவச பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதைத் திரும்பப் பெற வேண்டும். எவ்வித காரணமுமின்றி ரத்து செய்த வட்டாட்சியா், குறுவட்ட ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகத்தின் கோவில்பட்டி பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சுமங்கலி எம். ராஜா தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் செல்வின் சுந்தா், நகரச் செயலா் ஆரோக்கியராஜ், மாவட்ட இளைஞரணி இணைச் செயலா் ராமமூா்த்தி, நகர இளைஞரணிச் செயலா் மனோஜ்குமாா், பொருளாளா் செந்தில், திரளான பொதுமக்கள் பங்கேற்று முழக்கமிட்டனா்.
பின்னா் சாா்ஆட்சியா் ஹிமான்சு மங்களிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட அவா், இதுகுறித்து துறை அலுவலா்களிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

