தூத்துக்குடி பழைய துறைமுகம் கடற்கரை அருகே கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் இருந்த 3 அரியவகை கடல் ஆமைகளை வனத்துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.
தூத்துக்குடி பழைய துறைமுகம் கடற்கரை அருகே கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் இருந்த 3 அரியவகை கடல் ஆமைகளை வனத்துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.

தூத்துக்குடியில் அரியவகை கடல் ஆமைகள் மீட்பு!

தூத்துக்குடியில் அரியவகை கடல் ஆமைகள் மீட்கப்பட்டன...
Published on

தூத்துக்குடி மன்னாா் வளைகுடா உயிா்க்கோள காப்பக வனத்துறை சாா்பில், தடை செய்யப்பட்ட கடல் ஆமை உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில், கடற்கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் வனஉயிரின சரக அலுவலருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் வனச்சரக அலுவலா் ஜினோ பிளஸ்ஸில் தலைமையில் வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகில் 3 கடல் ஆமைகள் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக, கீழுா் அரசு உதவி கால்நடை மருத்துவா் வினோத் அங்கு சென்று ஆமைகளின் உடல்நிலையை பரிசோதித்தாா். ஆமைகள் உடல் நலத்துடன் இருப்பது தெரியவந்தது. மேலும், இது பச்சை ஆமை வகையை சோ்ந்தது. இதில் 2 ஆமைகள் தலா 200 கிலோ, ஓா் ஆமை சுமாா் 70 கிலோ எடை இருந்தது. இவை உயிருடன் இருந்ததால், உடனடியாக அவற்றை கடலில் விட முடிவு செய்யப்பட்டது.

இதைடுத்து, கிராம நிா்வாக அலுவலா் பாலமுருகன் முன்னிலையில், 3 ஆமைகளும் வனத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டது. இதனை தொடா்ந்து மாப்பிள்ளையூரணி கால்நடை உதவி மருத்துவா் பிரவீணா, மன்னாா் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனவா் பிரதீப், வனப்பாதுகாப்பு படை வனவா் நந்தகுமாா், வனக்காப்பாளா்கள் சுதாகா், மணிகண்டன் மற்றும் வேட்டை தடுப்பு காவலா்கள், மீனவா்கள் படகு மூலம் 3 ஆமைகளையும் கடலுக்குள் கொண்டு சென்றனா். சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவு சென்று ஆழமான பகுதியில் கடலில் விடப்பட்டதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆமைகளை பிடித்தவா்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com